Breaking News

மாணவர்களே ரெடியா? ரூ.50,000 பரிசு, சுவிட்சர்லாந்து பயணம:

 


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உலகளாவிய அளவில் நடைபெறும் யூனிவர்சல் போஸ்டல் யூனியன் (UPU) 2026 சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் பள்ளிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படுவதுடன், இந்தியாவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் மனித உறவுகளின் மதிப்பை வளர்க்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு 2026 ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் வெளியானது. சி பி எஸ் இ-யுடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் இந்த 55வது சர்வதேச கடிதம் எழுதும் போட்டியை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த போட்டியை இந்திய தபால் துறை ஒருங்கிணைக்கிறது. இவ்வாண்டிற்கான கருப்பொருள், “டிஜிட்டல் உலகில் மனித தொடர்புகள் ஏன் முக்கியம் என்பதை ஒரு நண்பருக்கு கடிதமாக எழுதுங்கள்” என்பதாகும். தொழில்நுட்ப ஆதிக்கம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், உணர்வுகள், உறவுகள் மற்றும் மனித இணைப்புகளின் அவசியத்தை மாணவர்கள் சிந்தித்து வெளிப்படுத்த ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த போட்டியின் கருப்பொருள் மாணவர்களின் எழுத்துத் திறன், கருத்து வெளிப்பாடு, சிந்தனையின் ஆழம் மற்றும் படைப்பாற்றல் மேம்படுவதுடன், நாடுகள் தாண்டிய நட்பு மற்றும் புரிதலையும் வளர்க்கும் என சி பி எஸ் இ தெரிவித்துள்ளது. உலகளவில் இந்த போட்டியை ஒருங்கிணைக்கும் யூனிவர்சல் போஸ்டல் யூனியன் சர்வதேச பணியகம், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அனுப்பப்படும் சிறந்த படைப்புகளிலிருந்து மூன்று சிறந்த கடிதங்களை தேர்வு செய்யும். அவற்றிற்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், தங்கப் பதக்கம் பெறும் மாணவருக்கு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள யு பி யு  தலைமையகத்தைப் பார்வையிடும் வாய்ப்பு அல்லது அதற்கு மாற்றாக வேறு பரிசும் வழங்கப்படலாம். சிறப்பு பாராட்டுப் பெறும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

தேசிய அளவிலும் மாநில (சர்கிள்) அளவிலும் இந்திய தபால் துறை தனித்தனியாக தேர்வு நடத்த உள்ளது. தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதேபோல், சர்கிள் அளவில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். தேசிய அளவில் முதலிடம் பெறும் கடிதமே இந்தியாவின் அதிகாரப்பூர்வ பதிவாக சர்வதேச போட்டிக்குத் தேர்வு செய்யப்படும்.

இந்த போட்டி ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழியிலும் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்களது பகுதிகளுக்கான நோடல் அதிகாரிகளுடன் இணைந்து போட்டியை நடத்த வேண்டும் என்றும், நோடல் அதிகாரிகளின் பட்டியல் விரைவில் பகிரப்படும் என்றும் சி பி எஸ் இ தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவரங்கள் இந்திய தபால் துறை இணையதளத்திலும் வெளியிடப்படும்.

மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இத்தகைய முயற்சிகள் மாணவர்களின் கருணை, மனிதநேயம், உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு உணர்வை வகுப்பறைக்கு அப்பாலும் வளர்க்க உதவும் என்றும் சி பி எஸ் இ தனது சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

No comments