பகத் சிங் தூக்கில் தொங்கும் காட்சி: வீட்டில் ஒத்திகை பார்த்த மாணவன் பரிதாப பலி! - என்ன நடந்தது?
பள்ளி நிகழ்ச்சிக்காக சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் தூக்கில் தொங்கும் காட்சியை ஒத்திகை பார்த்த 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில், நவம்பர் 1-ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா அன்று பள்ளியில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் சஞ்சய் கவுடா என்ற சிறுவன் 7-ம் வகுப்பு படித்துவந்தார். பள்ளியில் நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சியில், சஞ்சய் கவுடா என்ற மாணவன் பகத் சிங் வேடமணிந்து நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நாடகத்தில் நடிப்பதற்காக மாணவன் தீவிரமாக ஒத்திகை பார்த்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், மாணவன் சனிக்கிழமை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பகத் சிங்கை தூக்கில் போடும் காட்சிக்காக, ஒரு கயிற்றை எடுத்து தனது அறையில் உள்ள மின்விசிறியில் கட்டியதாகத் தெரிகிறது.
கம்பளித் தொப்பியால் தலையை மூடிக்கொண்டு, கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அவர் கட்டிலிலிருந்து குதித்திருக்கிறார். இதனால், கயிறு கழுத்தில் இறுக்கியதில் சில நிமிடங்களிலேயே அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். வெளியே சென்ற பெற்றோர் வீடு திரும்பிய பிறகு, தங்கள் மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். சஞ்சய் கவுடாவை உடனே மீட்டு , மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து காவலதுறை விசாரணை நடத்திவருகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, 12 வயது சிறுவன் சஞ்சய் கவுடா சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார். பள்ளியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் நடிக்க ஒத்திகை பார்க்குபோது தற்செயலாக இறந்துவிட்டார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம், `` பகத் சிங்கின் வேடத்தில் நடிக்க வேண்டும் என எந்த மாணவரிடமும் நாங்கள் கேட்கவில்லை. அவரே அந்தக் கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்து ஒத்திகை பாத்திருக்கலாம். அந்தச் சிறுவனின் மறைவால் நாங்கள் மிகவும் வேதனையடைந்திருக்கிறோம். அவர் ஏன் பகத் சிங்கின் கதாபாத்திரத்தை ஒத்திகை பார்த்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை'' என்றார்.
நாடகத்துக்காக ஒத்திகை பார்த்த சிறுவன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments