Breaking News

Water Bottles : நீங்கள் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா? அதில் உள்ள ஆபத்துக்களை பாருங்கள்!

 


நாம் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கட்டாயம் வாட்டர் பாட்டில்களை எடுத்துச்செல்கிறோம். அது நல்ல பழக்கமும் கூட, ஆனால் நாம் எந்த பாட்டிலில் தண்ணீர் எடுத்துச்செல்கிறோம் என்பது முக்கியம்.

நல்ல வாட்டர் பாட்டிலை தேர்ந்தெடுத்து அதில் தண்ணீர் கொண்டு செல்வது உங்கள் ஆரோக்கியத்துக்கும், உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைப்பதற்கும் நல்லது.

அதற்கு மெட்டல் வாட்டர் பாட்டில்கள் அதாவது, சில்வர், அலுமினியம், காப்பர் பாட்டில்கள் மிகவும் நல்லது. இவை நீண்ட நாட்கள் உழைக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் எளிதாக எடுத்துச்செல்லக்கூடியவை.

பிளாஸ்டிக் பாட்டில்களை ஏன் தவிர்க்க வேண்டும்?

பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்குவதும், எடுத்துச்செல்வதும் மிகவும் சுலபம். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைத்த தண்ணீரை பருகுவதால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீரை ஊற்றி பயன்படுத்தும்போதும் அது வெளிப்புற சூட்டில் உருகி தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை நாம் பருகும்போது அது நமது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கிறது. பைஸ்பினால் மற்றும் ஃபைதலேட்ஸ் என்ற நச்சுக்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ளது. இது ஹார்மோன்களின் இயக்கத்தில் இடையூறு செய்கிறது.

பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் வழிவகுக்கிறது. இனப்பெருக்க கோளாறுகள், உடல் பருமன் மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்பட காரணமாகிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து கசியும் நச்சுக்கள் தண்ணீரில் கலந்து செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது.

மெட்டல் பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச்செல்லலாம்

பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து மெட்டல் பாட்டில்களை தண்ணீர் எடுத்துச்செல்ல உபயோகிக்கலாம். மெட்டல் பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்களைப்போல் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. அவை நீண்ட நாட்கள் உழைக்கிறது. இதில் பைஸ்பினால் மற்றும் ஃபைதலேட்ஸ் போன்ற வேதிப்பொருட்களை பிளாஸ்டிக் பாட்டில்கள் வெளியிடுவதுபோல், மெட்டல் பாட்டில்கள் எந்த நச்சுக்களையும் தண்ணீரில் வெளியிடுவதில்லை.

இந்த பாட்டில்கள் வெப்பநிலையை தக்கவைப்பதில் சிறப்பானவை. நீண்ட நேரத்திற்கு பானங்களை குளிர்ச்சியாகவும், சூடாகவும் வைக்க உதவுபவை. இது வெளியே செல்வதற்கு, பயணங்களுக்கு எடுத்துச்செல்வதற்கு, பள்ளிக்கு அல்லது வேலைக்கு பானங்களை எடுத்துச்செல்வதற்கு உதவும்.

மெட்டல் வாட்டர் பாட்டிகளை மீண்டும் உபயோகிக்கலாம். ரிசைக்கிளும் செய்துகொள்ளலாம். இவற்றை சுற்றுச்சூழலுக்கு மாற்றாகக் கொள்ளலாம். இவை கீழே விழுந்தாலும் உடையாது அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களை விட குறைவானது. இதை தினசரி பயன்பாட்டுக்கு உபயோகித்துக்கொள்ளலாம்.

வெளியே எடுத்துச்செல்வதற்கும் ஏற்றது. எவர்சில்வர் மற்றும் அலுமினிய பாட்டில்களை சுத்தம் செய்து பராமரிப்பதும் எளிது. கறை படியாது. துர்நாற்றம் வீசாது. உங்கள் தண்ணீர் சுத்தமாகவும், ஃபிரஷ்ஷாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும். நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் டிஷ்வாஷரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எந்த மெட்டல் சிறந்தது

எவர்சில்வர் வாட்டர் பாட்டில்கள் லேசானவை, நீண்ட நாட்கள் வரக்கூடியவை, சேதமடையாதவை. எவ்வித நச்சையும் உள்ளே இருக்கும் தண்ணீரிலோ அல்லது பானத்திலோ கலக்காது. இவை குளிர்ந்த மற்றும் சூடான பானங்கள் இரண்டும் வைப்பதற்கு பாதுகாப்பானது. இதை சுத்தம் செய்வது எளிது மற்றும் நாற்றத்தை தக்கவைக்கும்.

அலுமினியம் வாட்டர் பாட்டில்களும் லேசானவை மற்றும் எளிதில் வாங்கக்கூடியவை. இவற்றை ரிசைக்கிள் செய்ய முடியும். இவற்றை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகக் கொள்ள முடியும். இதுவும் தண்ணீரில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது. எனினும் அலுமினிய பொருட்கள் உணவருந்த உகந்தது அல்ல என்பதால் பெரும்பாலும் இதை தவிர்ப்பார்கள்.

காப்பர் வாட்டர் பாட்டில்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒன்று. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள உள்ளது. இதில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான திறன், செரிமானத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

ஆனால் இதில் சாதாரண தண்ணீரை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், அமிலத்தன்மை கொண்ட திரவங்களுடன் இதனுடன் வினைபுரியும். அதிகளவில் காப்பர் எடுப்பது உடலுக்கு கேடு. எனவே எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும்.

மெட்டல் பாட்டில்கள் வாங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

எவர் சில்வர் அல்லது அலுமினிய பாட்டில்கள் சிறந்தது. பைஸ்பினால் மற்றும் ஃபைதலேட்ஸ் இல்லாத பாட்டில்கள் வாங்குவது பாதுகாப்பானது. உட்புறத்தில் என்னவிதமான கோட்டிங் உள்ளது என்பதை பார்க்க வேண்டியதும் அவசியம். நச்சுக்கள் இல்லாத, உணவுக்கு உகந்த கோட்டிங் கொண்ட வாட்டர் பாட்டில்களை தேர்ந்தெடுப்பதும் அவசியம். தண்ணீரில் நச்சு கலக்கும் கசிவை ஏற்படுத்தக்கூடிய வாட்டர் பாட்டில்களை தவிர்ப்பது நல்லது.

No comments