Breaking News

மதிப்புக்குரிய இயக்குனர் அவர்களை நாளை சந்திக்க உள்ள இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கு -ஓர் இடைநிலை ஆசிரியனின் புலம்பல்:

இதை ஓர் இடைநிலை ஆசிரியனின் புலம்பல் என்று வைத்துக் கொள்ளலாம் கூப்பாடு என்று வைத்துக் கொள்ளலாம் அல்லது ஏதேனும் ஒருவகையில் தீர்வு கிடைக்குமா என்பதை எதிர்நோக்கி எழுதும் ஒரு கடிதம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..  

பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.. இயக்குனரை சந்திக்க உள்ளீர்கள்.. அதுசமயம் பேச வாய்ப்பு கிடைத்தால்(!?) என்ன பேசலாம் என்ற குறிப்புகளைத் தயார் செய்து வைத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. இயக்குனரை சந்திக்கும் சமயத்தில் இயக்குனரால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளான இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான கோரிக்கை, சிபிஎஸ் தொடர்பான கோரிக்கை போன்ற கோரிக்கைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு இயக்குனர் என்ற அதிகாரத்தின் மூலம் என்ன செய்யமுடியுமோ அந்த கோரிக்கைகளை மட்டும் அவரிடத்தில் வைத்தால் அது இடைநிலை ஆசிரியர் சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்...

 பொதுவாக இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்...ஆம்  ஒரு பள்ளியிலும் சரி, சமூகத்திலும் சரி அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் தான்...

  பள்ளிக்கு சீருடை வழங்குகிறார்கள், நோட்டுப்புத்தகம் வழங்குகிறார்கள் என்றாலும் கூட அது நடுநிலைப் பள்ளியாக இருந்தால் இடைநிலை ஆசிரியர் மட்டுமே அதை எடுத்து வரச் செல்கிறார்.. அதேபோல் தலைமையாசிரியருக்கு வேலை என்றாலும் அதை இடைநிலை ஆசிரியர் தான் முன்நின்று செய்கிறார்..  ஒரு அதிகாரி/பார்வையாளர் பள்ளிக்கு வருவதில் ஏதேனும் சிக்கல் இருந்தாலும் இடைநிலை ஆசிரியர்கள் தான் கூப்பிட்டுக் கொண்டு வருகிறார்கள்..  எனவே இப்படி இடைநிலை ஆசிரியர்கள் தங்கள்  வேலையைத் தாண்டியும் பல வேலைகளைச் செய்பவரா்களாகவே இருக்கிறார்கள்..

இதையெல்லாம் செய்வதற்காக அவர்கள் ஏதேனும் சிறு சலுகையாவது அனுபவிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.. ஊதியக் குழுக்கள் மூலம் ஊதியம் மாற்றம் ஏற்பட்டால் அனைவருக்கும் சரியான ஊதியம் கிடைக்கிறது ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை.. இவ்வளவு ஏன் பயிற்சி வகுப்புகள் கூட மற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி தொடங்கியபின் நடைபெறுகிறது ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் விடுமுறை நாட்களில் அதுவும் 5 நாட்கள் நடைபெற உள்ளன..."கிச்சா என்றாலே இளிச்சவாயன் தானே" என்று  சினிமாவில் சொல்வதைப்போல,  இடைநிலை ஆசிரியர் என்றாலே இளிச்சவாயர்கள் தானோ??

இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய துரோகம் என்னவென்றால் 2017 ஆம் ஆண்டு ஒரு போராட்டம் நடந்தது அதில் மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன... முதல் கோரிக்கை 7வது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்தப்பட வேண்டும் என்பது... இரண்டாவது கோரிக்கை சிபிஎஸ் இரத்து செய்ய வேண்டும் என்பது...  மூன்றாவது கோரிக்கை ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை.. ஆனால் போராட்டத்தின் முடிவில் நடந்தது என்ன?? முதல் கோரிக்கையான ஊதியக் குழுவை அமல்படுத்தப்படும் என்ற நிலை வந்தவுடன் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.. உங்களை நம்பி வந்த இடைநிலை ஆசிரியர்கள் அம்போவென கைவிட்டீர்கள்... கூட்டம் சேர்ப்பதற்கு மட்டும் பயன்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறாமலேயே வெளியேற்றப்பட்டார்கள்... இவ்வாறு இடைநிலை ஆசிரியர்களை கூட்டிக்கொண்டு போய் கூட்டம் சேர்த்து விட்டு அவர்களுக்கு தேவையானதை எல்லாம் விட்டுவிட்டு தங்களுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொள்ளும் ஒரு நிலை தான் இதுவரை இருந்துள்ளது.. தமிழ்நாட்டிலுள்ள  ஒவ்வொரு இடைநிலை ஆசிரியர்களும் இதை அறியாமல் இல்லை....

இனிமேலாவது எங்களுக்காக நீங்கள் பேசும் பட்சத்தில் நடந்தவற்றை மறக்கவும் மன்னிக்கவும் இடைநிலை ஆசிரியராக நாங்கள் தயாராக இருக்கிறோம் ...  இனியாவது எங்கள் கோரிக்கைகளை நீங்கள் பரிசீலியுங்கள்... அதாவது ஊதிய உயர்வு கோரிக்கை என்பதைக் கூட அரசிடம் விட்டுவிடுங்கள்.. குறைந்தபட்சம் இயக்குனர் அவர்களை சந்திக்கும் போது எங்களுடைய பிரச்சனைகளான ஊக்க ஊதியம் ரத்து மற்றும் பதவி உயர்வில் நடக்கும் அநீதி ஆகியவற்றை சுட்டிக்காட்டுங்கள்... காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஊக்க ஊதியமானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.. இன்று பல ரூபாய் செலவு செய்து படித்த பி.எட் படிப்பிற்கும் அதற்கு மேல் படித்த முதுகலை படிப்பிற்குக் எந்த ஒரு பயனுமில்லை ஒரு நிலை உருவாகியுள்ளது.. அதை எடுத்துரையுங்கள்.. ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களை நடுநிலைப்பள்ளிகளில் நேரடியாக நியமிப்பதன் மூலமாக பல இடங்களை நாங்கள் இழந்துள்ளோம்.. கூடவே இப்பொழுது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக மாறுவதற்கும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக மாறுவதற்கும் பல அநீதிகள் நடக்கின்றது.. அதேபோல் ஒரு இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.. குறிப்பாக எங்கேயோ இருந்து புதிதாக படித்து விட்டு வரும் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக உடனடியாக பதவி ஏற்கிறார் ஆனால் 20 வருடமாக இடைநிலை ஆசிரியராக இருந்தும் பட்டதாரி ஆசிரியருக்கான தகுதியைக் கொண்டிருந்தும் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக முடிவதில்லை.. எனவே இடைநிலை ஆசிரியருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கையை சங்கங்கள் வைக்க வேண்டும்..  பே கமிஷனில் நிலுவைத்தொகை வேண்டும் என்று கேட்கத் தெரிந்த சங்கங்களுக்கு, சரண் விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் வேண்டும் என்று கேட்க தெரிந்த சங்கங்களுக்கு, ஏ பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் ஆயிரத்தை நிறுத்தக்கூடாது என்று கேட்க தெரிந்த சங்கங்களுக்கு மேற்கண்ட கோரிக்கைகளை கேட்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று நம்புகிறோம்...

இல்லை அதெல்லாம் சிரமமெனில் குறைந்தபட்சம் ஏனைய ஆசிரியர்கள் விடுமுறையில் இருக்க இடைநிலை ஆசிரியருக்கு மட்டும் தான் பயிற்சியானது விடுமுறையில் நடக்கிறது  என்ற விஷயத்தையாவது சுட்டிக்காட்டுங்கள்... சிறிதளவேனும் எங்களுக்காய் பேசியதாய் உணர்வோம்...

நன்றி,

இப்படிக்கு, சங்கங்களை நம்பிய, இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற, சங்கங்கள் இந்தப் பதிவையும் கடந்து செல்வார்கள் எனத் தெரிந்தும் கடிதம் எழுதுகிற இனா வானா இடைநிலை ஆசிரியன்...

No comments