கோடை விடுமுறை வந்தாச்சு..! பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு
தமிழக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த நாளில் விடுமுறை தொடங்கும் என்றும், எந்த தேதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து வெளியாகியிருக்கிறது.
மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது. 25,04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.
2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்-என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்வுகள் முடிந்தது..!
ஏப்ரல்-மே மாதம் என்றாலே, மாணவர்களுக்கு மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்வுதான் இருக்கும். காரணம், இந்த மாதத்தில்தான் தேர்வுகளும் தொடங்கும். அனைத்து தேர்வுகளையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், “அப்பாடா..அடுத்த வருஷம் புது வகுப்புக்கு போறோம். 1 மாசம் லீவ் இருக்கு” என்ற நிம்மதியும் மாணவர்களுக்கு இருக்கும். இப்போதும் அது போலத்தான், 6 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வரும் ஏப்ரல் 25ஆம் தேதியோடு அனைத்து தேர்வுகளும் முடிவடைகிறது.
இந்த வருடத்தில், இனி வரும் நாட்களில் வெயில் அதிகமாக இருக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜூன் 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தை எப்படி கழிக்கலாம் என மாணவர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்திருப்பர். 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான பின்புதான் எதுவாக இருந்தாலும் தெரிய வரும். எனவே, இவர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை காத்திருத்தல் வேண்டும்.
No comments