தமிழகத்தில் உள்ள சுயநிதி தமிழ்வழி பள்ளிகளை அரசு உதவிபெறும் பள்ளிகளாக அறிவிக்க வலியுறுத்தல்
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.செபாஸ்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தமிழ்வழிப் பள்ளிகளுக்கு ஆசிரியருக்கான ஊதியம் அரசால் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1991-ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு 14-ஏ என்ற சட்டத்தை இயற்றி, 1991-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு மானியம் (ஆசிரியர்களுக்கான ஊதியம்) இனி வழங்கப்படாது என முன் தேதியிட்டு அறிவித்தது.
இதையடுத்து, இப்பள்ளிகள் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் சுயநிதிப் பள்ளிகளாக மாறின. இதற்கான கட்டணத்தை தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. இதனால், தமிழகத்தில் தமிழர்கள் தமிழ்வழியில் பயில கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை உருவானது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில், இருக்கும் சில தமிழ்வழிப் பள்ளிகளை சுயநிதி என்ற பெயரில் அரசு நடத்த சொன்னால், கட்டணம் கட்டி தமிழ்வழியில் சேர்க்க யார் முன்வருவார்?
சுயநிதி தமிழ்வழிப் பள்ளிகளில் பணிபுரியும் 5,000 ஆசிரியர்கள் ரூ.5,000, ரூ.10,000 ஊதியம் பெற்று, வாழ்க்கை நடத்த இயலாமல் வதைபடுகின்றனர்.
இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியின்போது கோரிக்கை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. அதேபோல, இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கும் விலையில்லா பொருட்கள் மற்றும் உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவையும் முற்றிலும் மறுக்கப்படுகின்றன.
இந்நிலையில், 2011-ல் ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் இதுகுறித்து முறையிட்டதன் பலனாக 14-ஏ ஆணையை ரத்து செய்து, 1998 வரை தொடங்கப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழிப் பள்ளிகளுக்கு பணியிடம் வழங்கி 14-பி என்ற ஆணையை 28-2-2011-ல் பிறப்பித்தார். அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்த ஆணையை நிறைவேற்ற மறுத்துவிட்டது.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு தமிழக தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கம், சுயநிதி தமிழ்வழிப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அப்போது, 'சுயநிதி தமிழ்வழிப் பள்ளிகளுக்கு நிதி வழங்கிய 14-பி என்ற ஆணையை நான் முதல்வரானதும் நிச்சயம் நிறைவேற்றுவேன்' என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை. அதிக நிதி செலவாகும் என அச்சுறுத்தி கோரிக்கையை, நிறைவேற்ற விடாமல், அரசு அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.
இதற்காக அரசு ஒரு ரூபாய்கூட கூடுதலாக செலவழிக்க வேண்டியதில்லை. மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்கள் ஆண்டுதோறும் அரசுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 5,000 பணியிடங்களை சுயநிதி தமிழ்வழிப் பள்ளிகளுக்கு வழங்கினாலே போதும். சட்டப்பேரவையில் வரவுள்ள கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, சுயநிதி தமிழ்வழிப் பள்ளிகளை அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றி தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments