Breaking News

உங்கள் குழந்தைக்கு வங்கிக்கணக்கு உள்ளதா? RBI புதிய விதிகள்... தெரிந்துகொள்ளுங்கள்:

 


18 வயதுக்குட்பட்ட சிறார் அல்லது குழந்தைகளின் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் இயக்குவதற்குமான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. ஜூலை 1, 2025 ஆம் தேதிக்குள் புதிய வழிகாட்டுதல்களின்படி வங்கிகள் தங்கள் தற்போதைய கொள்கைகளைத் திருத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதுவரை, வங்கிகள் தற்போதுள்ள கொள்கைகளைத் தொடரலாம். ஆர்பிஐ அளித்துள்ள புதிய வழ்ழிகாட்டுதல்கள் என்ன? இதில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எனினும், இந்த வழிமுறைகள் கட்டாயமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். வங்கிகள் தங்கள் "இடர் மேலாண்மைக் கொள்கை, திட்டங்களுடனான பொருத்தம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஒத்திசைவு" ஆகியவற்றைப் பொறுத்து வழிமுறைகளை முழுமையாக செயல்படுத்தலாம் அல்லது செயல்படுத்தாமல் போகலாம்.

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய புள்ளிகள் பின்வருமாறு:

அனைத்து வயது மைனர் குழந்தைகளுக்குமான வங்கிக் கணக்கு விதி

அனைத்து வயது சிறார்களையும் அவர்களின் இயற்கையான அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளைத் திறந்து இயக்க வங்கிகள் அனுமதிக்கலாம் என RBI தெரிவித்துள்ளது. தாயை பாதுகாவலராகக் கொண்ட மைனர் கணக்குகளையும் வங்கிகள் அனுமதிக்கலாம்.

10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கான வங்கிக் கணக்கு விதி

- 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மைனர்கள் தங்கள் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளை சுயாதீனமாக இயக்க வங்கிகள் அனுமதிக்கலாம் என்று RBI கூறியுள்ளது.

- வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் அத்தகைய கணக்குகளுக்கான தொகை மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிர்ணயிக்கலாம். அத்தகைய கணக்குகளின் விதிமுறைகள் கணக்குதாரருக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

வயது முதிர்ந்த பிறகு வங்கிக் கணக்கு விதி

- வயது முதிர்ந்தவுடன், அதாவது 18 வயதை அடைந்தவுடன், வங்கி புதிய செயல்பாட்டு வழிமுறைகளை வெளியிட்டு, கணக்கு வைத்திருப்பவரின் மாதிரி கையொப்பத்தைப் பதிவு செய்யும். கணக்கு பாதுகாவலரால் இயக்கப்பட்டால், வங்கி இருப்பை உறுதிப்படுத்தும்.

- இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக, கணக்கு வைத்திருக்கும் 18 வயதை அடைந்த மைனர்களுக்கு இந்தத் தேவைகளைத் தெரிவிப்பது உட்பட, வங்கிகள் முன்கூட்டியே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிற வசதிகளுக்கான விதி: ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங், காசோலை புத்தகம்

- கணக்கு  வைத்திருக்கும் சிறார்களுக்கு இணைய வங்கி, ஏடிஎம்/டெபிட் கார்டுகள், காசோலை புத்தக வசதி போன்ற கூடுதல் வங்கி வசதிகளை வழங்க வங்கிகளுக்கு சுதந்திரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கிகள் அவற்றின் இடர் மேலாண்மைக் கொள்கை, தயாரிப்பு பொருத்தம் மற்றும் வாடிக்கையாளர் பொருத்தத்தின் அடிப்படையில் இந்த சலுகைகளை வழங்கலாம்.

- இருப்பினும், வங்கிகள் மைனர் கணக்குகளில் எப்போதும் கிரெடிட் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுயாதீனமாகவோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ இயக்கப்படும் சிறார்களின் கணக்குகளில் அதிகப்படியான பணம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அவை எப்போதும் கிரெடிட் பேலன்சுடன் இருப்பதையும் வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


No comments