ஒவ்வொரு வீட்டிலும் ஒரு "கூலிங்க் குண்டு".. ஃப்ரிட்ஜ், ஏசி வெடிப்பது ஏன்? தவிர்க்க என்ன செய்வது?
ஊரப்பாக்கம் அருகே மின்கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் வெடித்த விபத்தில் வீட்டில் இருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், ப்ரிட்ஜ் மற்றும் ஏசி வெடிப்பதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரை சேர்ந்தவர் கிரிஜா (63). இவரது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்ததில் கிரிஜா, அவரது தங்கை ராதா (55), உறவினர் ராஜ்குமார் (48) ஆகியோர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. சிறிய குடிசை வீடாக இருந்தாலும் கூட ஃப்ரிட்ஜை வாங்கி அதற்கென ஒரு இடத்தை வழங்கி விடுகிறார்கள்.
தண்ணீர், உணவு பொருட்களை குளிர்ச்சியாக்கி, கெட்டுப்போக விடாமல் பாதுகாக்கும் இந்த ஃப்ரிட்ஜ் சில சமயங்களில் உயிர் பறிக்கும் வெடிகுண்டாக மாறிவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி வெடிப்பால் நிகழும் உயிரிழப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
மக்கள் பீதி
தமிழ்நாட்டில் ஏசி பயன்பாடும் சகஜமாகிவிட்டது. இருந்தாலும் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவுக்கு உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருந்தாலும், பழைய ஃப்ரிட்ஜை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க ஃப்ரிட்ஜ் வெடிப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
கம்பிரசர் வாயு
இந்த நிலையில் ஃப்ரிட்ஜ், ஏசி வெடிப்பதற்கான காரணங்கள் மற்றும் அதை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம். நிறுவனங்கள் பரிந்துரைக்கும் அளவில்தான் கம்பிரசரில் வாயுவை அடைக்க வேண்டும். அதை தாண்டி வாயுவை அடைப்பதும் ஆபத்து. நவீன மாடல்களில் வாயு அழுத்த அளவை காட்டிலும் எடை முக்கியமானது.
நவீன ஏசி, ஃப்ரிட்ஜுகள்
தற்போது வெளியாகும் ஃப்ரிட்ஜ், ஏசிக்களில் பல்வேறு நவீன வசதிகள் இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. கேஸ் அடைப்பு ஏற்படுவது வழக்கம். பழைய மாடல்களில் அவ்வாறு நிகழ்ந்தால் கம்பிரசர் சூடாகும். ஆனால் புதிய மாடல்களில் குழாய் வெடித்து தீப்பிடிக்கிறது.
வாயு குழாய்கள்
பழைய மாடல்களின் வாயு அழுத்தம் 130 ஆக இருந்த நிலையில் புதிய மாடல்களில் 230 - 240 ஆக இருக்கிறது. இந்த அழுத்தத்திற்கு ஏற்பவே குழாயின் அளவு இருக்க வேண்டும். ஆனால், பழைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட குழாய் அளவையே பல நிறுவனங்கள் தற்போதும் பயன்படுத்துகின்றன. எனவே அடைப்பு ஏற்பட்டால் மின் சாதனம் வெடித்துவிடுகிறது.
புதிய வாயு
பழைய மாடல்களில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த குளோரோ புளோரோ கார்பன் எனப்படும் வாயுவால் ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி புதிய மாடல்களில் R-600A என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது. முந்தைய வாயுவைவிட இந்த வாயுவுக்கு சீக்கிரம் தீப்பிடிக்கும் தன்மை உள்ளது.
இன்வெர்டர் மாடல்கள்
நவீன ஏசி, ஃப்ரிட்ஜுகளில் மின்சாரத்தில் சிக்கனப்படுத்த இன்வெர்டர்கள் வந்துவிட்டன. குறைந்த அளவிலான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் இந்த கருவிகள்தான் அதிகம் வெடிக்கின்றன. ப்ரிட்ஜில் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துகிறோம் என்பதால் லேசான "ஷாக்" ஐ உணர்ந்தாலே வயர், எர்த் பிரச்சனை உள்ளதா என்பதை பார்த்து சரி செய்ய வேண்டும்.
வீணாகும் தண்ணீர்
வீணாகும் தண்ணீர் கம்பிரசரின் மேற்பகுதியில் தேங்கி நிற்கும். அதை தேக்கி வைத்திருக்கும் டிஷ் பகுதியில் ஓட்டை இருந்தால் தண்ணீர் கம்பிரசரில் விழும். இதனால் ஷாட் சர்க்யூட் ஏற்பட்டு விபத்து வரும். பிரிட்ஜ் பின் பகுதியில் இருக்கும் கம்பிகளும் விபத்துக்கு காரணமாகும் என்பதால் இவற்றை கண்காணிக்க வேண்டும்.
பராமரிப்பு
அதேபோல் வயர்களை எலிகள் கடிக்காத வகையில் கண்காணிப்பதுடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்திட வேண்டும். அடிக்கடி ஃப்ரிட்ஜின் உள்பகுதியை தூய்மை செய்ய வேண்டும். மின்கசிவு, மின்விநியோக பிரச்சனை இருந்தால் கருவிகள் பழுதாகும். எனவே அதை சீராக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயிற்சி பெற்றவர்கள் முக்கிய
அதே நேரம் நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் மட்டுமே ஏசி, ஃப்ரிட்ஜை பழுது பார்க்க வேண்டும். சில மாதங்கள் மட்டும் பயிற்சி பெற்று சர்வீஸ் செய்ய வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் பழுதுபார்ப்பவர்களுக்கு அதை கையாள்வது குறித்து பயிற்சி தர வேண்டும்.
No comments