மாதம் ரூ.12500 செலுத்தினால் போதும் ரூ.72 லட்சம் கிடைக்கும்.. இப்படி சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?
பெண் குழந்தைகளின் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான சிறு சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) ஆகும். அனைத்து அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களிலும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு (SCSS) இணையாக 8.2% என்ற மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசால் ஆய்வு செய்யப்பட்டாலும், அக்டோபர் - டிசம்பர் 2025 காலாண்டிற்கு 8.2% வட்டி தொடர்கிறது.
மத்திய அரசின் Beti Bachao Beti Padhao என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளைச் சமாளிக்க நிதிப் பாதுகாப்பு வழங்குவதே இதன் முதன்மையான நோக்கம். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குறிப்பிட்டபடி, இந்த திட்டத்தில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டு, சுமார் ரூ.3.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் இத்திட்டத்தின் மீதான வலுவான நம்பிக்கையை காட்டுகிறது.
முதலீட்டு விதிமுறைகள் :சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. முதலீடு, ஒரே தவணையாகவோ அல்லது மாத தவணைகளாகவோ இருக்கலாம். இந்தக் கணக்கு தொடங்கப்பட்ட நாளில் இருந்து 15 ஆண்டுகள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். ஆனால், அதன் முதிர்வு காலம் பெண் குழந்தைக்கு 21 வயது நிறைவடையும்போது தான். இதன் சிறப்பு என்னவென்றால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும், மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கும் வட்டி தொடர்ந்து கணக்கிடப்படும்.
வருமான வரி விலக்கு : இந்த திட்டத்தில் செய்யப்படும் ஆண்டு முதலீடுகள், வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை (பழைய வரி விதிமுறையை பின்பற்றுபவர்களுக்கு). மேலும், இந்த திட்டம் மூலம் ஈட்டப்படும் வட்டி முழுமையாக வரி விலக்கு (Tax-Free) அளிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, ஒரு பெற்றோர் தங்கள் பெண் குழந்தை பிறந்த உடனேயே அதிகபட்ச முதலீட்டு தொகையான ரூ.1.50 லட்சத்தை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளில் அவர்கள் செய்த மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆக இருக்கும். முதிர்வு காலம் (21 ஆண்டுகள்) முடிவில் ஈட்டப்படும் மொத்த வட்டி ரூ.49,32,119 ஆக இருக்கும். எனவே, மொத்தமாக ரூ.71,82,119 கிடைக்கும்.
இந்தத் திட்டம், மிக குறைவான முதலீட்டில் தொடங்கி, பெண் குழந்தைக்கு உயர் கல்வி அல்லது திருமணம் தேவைப்படும் முக்கியமான நேரத்தில் ஒரு பெரும் தொகையை உத்தரவாதத்துடன் அளித்து, அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கிறது.

No comments