டெட் தேர்வு | ஆசிரியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்! :
TET Exam Update: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு, டெட் தேர்வுகளில் (TET Exam) இருந்து முழுமையான விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
அதன்பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு முழு ஆதரவை கொடுக்கும் என்றும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில், இது குறித்து எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், 2011-ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.
மேலும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் அடுத்த ஆண்டு சிறப்பு டெட் தேர்வும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments