தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி :
அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத் தேர்வு எழுதிய மாணவர்களில் 2.98 லட்சம் (40%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடம் மற்றும் கணித திறனை மேம்படுத்தும் விதமாக திறன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கற்றலில் பின் தங்கிய 7.46 லட்சம் மாணவர்கள் கண்டறியப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு அவர்களின் அடிப்படைத் திறன்கள் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் 2 மாத பயிற்சிக்கு பின்பு செப்டம்பர் மாதம் நடைபெற்ற திறன் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, திறன் இயக்கத் தேர்வில் 7 லட்சத்து 46,594 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 2 லட்சத்து 98,998 பேர் (40%) தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி, பெரம்பலூர், நெல்லை, ஈராடு ஆகிய மாவட்ட மாணவர்கள் 50 முதல் 70 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் வேலூர், விருதுநகர், திருவாரூர், தென்காசி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்ட மாணவர்கள் 28 முதல் 33 சதவீதம் அளவுக்கு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அவர்களுக்கு உரிய வகுப்புக்கு அனுப்பப்பட்டு, தொடர்ச்சியான வகுப்பறை கற்றலுக்கு அனுமதிக்கப்படுவர்.
அதேபோல், எஞ்சியுள்ள 4 லட்சத்து 47,596 திறன் இயக்க மாணவர்களுக்கும் தொடர் பயிற்சி அளித்து அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் கற்றல் அடைவு எட்டப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments