Breaking News

"இதை" செய்தால் 10 ஆண்டுகளில் ரூ.1.2 கோடி ரெடி! மொத்தமே 4 ஈஸியான மேட்டர் தான்.. இது நல்லா இருக்கே

 


சொந்தமாக ஒரு வீடு, பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கப் பணம் உட்பட ரூ.1.2 கோடி சேமிப்பு பெறுவது ஆகியவை இந்திய ஒரு மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒரு கனவு போலத் தோன்றும். சாதாரண மிடில் கிளாஸ் மக்களுக்கு இது எட்டாத ஒன்றாகவே தெரியும். ஆனால், சரியான முறையில் திட்டமிட்டால் இதுவும் கூட சாத்தியம் தான் என்கிறார் ஒரு வல்லுநர். இதற்காக அவர் ஒரு சிம்பிள் பிளானையும் கொடுத்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மிடில் கிளாஸ் வருமானம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் எதிர்பாராத செலவுகள் காரணமாக ஓய்வுக்குத் தேவையான தொகையைச் சேர்ப்பது பல மிடில் கிளாஸுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கும். ஆனால், அப்படி இல்லை.. சரியாகத் திட்டமிட்டால் எல்லாமே சாத்தியம் தான் என்கிறார் பட்டயக் கணக்காளர் நிதின் கௌஷிக். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் விரிவான போஸ்ட்டையும் பதிவிட்டிருக்கிறார்.

ரூ.1.2 கோடி

ரூ.1.2 கோடியை எப்படிச் சேமிக்கலாம் என்பது குறித்த விரிவான பிளானை அவர் விளக்கியுள்ளார். ஒழுக்கம், சிறந்த திட்டமிடல் மற்றும் தொடர்ச்சியான முதலீட்டுப் பழக்கவழக்கங்கள் மூலம் சாதாரண வருமானம் கொண்டவர்களும் வெறும் 10 ஆண்டுகளில் ₹1.2 கோடி வரை சேர்க்க முடியும் என்று அவர் விளக்கினார். அவரது ட்விட்டர் பக்க விளக்கத்தை நாம் பார்க்கலாம்:

1. முன்கூட்டியே தொடங்குங்கள்

முதலீடுகளைச் சீக்கிரம் தொடங்குவதே இதில் பிரதானம்.. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதலீட்டுத் திட்டத்தை அவர்கள் பிறந்த உடனேயே தொடங்க வேண்டும். இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் பிபிஎஃப்-இல் மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் 15 ஆண்டுகளில் ₹60 லட்சம் வரை சேமிக்க முடியும் என்கிறார்.

மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் எப்படி இவ்வளவு பெரிய தொகையைச் சேமிக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கூட்டு வட்டி தான் அதற்குக் காரணம். கூட்டு வட்டி, அதாவது காம்பவுண்டிங் என்ற மெஜிக் மூலம் ஆண்டுக்குச் சுமார் 12% வரை வருமானம் கிடைக்கும். PPFல் பாதுகாப்பு, வரிச் சலுகைகள் மற்றும் நிலையான வருமானம் கிடைக்கிறது. அவ்வப்போது கையில் கிடைக்கும் தொகையைக் கூடுதலாக முதலீடு செய்தால் மொத்தத் தொகையை இன்னும் அதிகரிக்கும்.

2. வீடு வாங்கும்போது கவனம்

பெரும்பாலான இந்தியர்களுக்கு, சொந்த வீடு ஒரு பெரிய கனவு. ஆனால் அதைப் பொறுமையுடன் செயல்படுத்த வேண்டும் என்கிறார் கௌஷிக். வீட்டுக் கடன் என்பது நீண்ட காலம் நீடிக்கும் ஒன்று! எனவே, அதில் இறங்குவதற்குப் பதிலாகத் தொடக்கத்தில் வாடைக்கு இருங்கள்.. வாடகைக்கு இருந்து கொண்டே வீட்டிற்கான பணத்தைச் சேமிக்கலாம். வீட்டின் மொத்த ரேட்டில் குறைந்தது 25%ஐ டவுன் பேமெண்டிற்கு சேமித்து வைக்கவும்.

மேலும், வீட்டுக் கடன் வாங்கும் போது, காலத்தைக் குறுகியதாக (20 வருடங்களுக்குப் பதிலாக 10 ஆண்டுகள்) வைத்துக்கொள்ளுங்கள், மேலும் வீட்டின் இஎம்ஐ உங்கள் மாத வருமானத்தில் 35%ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடனை வேகமாகச் செலுத்துவதால் வட்டிச் செலவுகள் குறையும். இதன் மூலம் மற்ற விஷயங்களில் அதிகமாக முதலீடு செய்யலாம்.

3. இப்போதே ஓய்வூதியத்தைச் சேமிக்கவும்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPF) மட்டும் ஓய்வூதியத்திற்கு நம்பியிருப்பது ஆபத்தானது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான (NPS) பங்களிப்புகளைப் படிப்படியாக அதிகரிக்கவும். ஓய்வூதியத்திற்காக இருக்கும் சிப் தொடங்கவும் என்கிறார் கௌஷிக்! இதன் மூலம் 10 ஆண்டுகளில் ஓய்வூதியச் சேமிப்பில் ₹30-35 லட்சத்தை உருவாக்கலாம். இந்தத் திட்டம் பணவீக்கம் மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பை வழங்குகிறது.

4. சிறிய பழக்கங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது

செல்வம் சேர்ப்பது என்பது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இல்லை.. மாறாக நீங்கள் எவ்வளவு சீராக அதைச் சேமிக்கிறீர்கள் என்பதுதான். இதற்காக கௌஷிக் சில விஷயங்களைப் பரிந்துரைத்துள்ளார்.

  • Lifestyle inflationஐ தவிர்க்கவும். அதாவது உங்கள் வருமானம் அதிகரிப்பதால் செலவுகள் அதிகரிக்க விடாதீர்கள்.
  • உங்கள் செலவுகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • உங்கள் சேமிப்பு டார்கெட்டை அடையும் வரை ஓவர் செலவு வைக்கும் பயணங்களைத் தள்ளிப் போடுங்கள்.

சிப் முதலீடுகளில் ₹5 லட்சம் உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடைவது அல்லது கடன்களை முன்கூட்டியே செலுத்துவது போன்ற மைல்கற்களைக் கொண்டாடுங்கள் இது உளவியல் ரீதியாக நமக்கு ஓர் உத்வேகத்தைத் தரும்.

ரூ.1.2 கோடி ரெடி

இந்தத் திட்டத்தை எல்லாம் சரியாகப் பின்பற்றினால் ஓய்வுபெறும்போது மிடில் கிளாஸ் மக்கள், மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ₹72 லட்சம் சேமிக்கலாம் என்கிறார் கௌஷிக்.. PPF, EPF மற்றும் NPSகளில் ₹28 லட்சம், நிலையான வைப்பு நிதி மற்றும் அவசர நிதியில் ₹8 லட்சம், வீட்டிற்கு ₹15 லட்சத்தைச் சேர்க்க முடியும் என்கிறார் கௌஷிக்! ஒட்டுமொத்தமாகச் சேர்த்தால் 10 ஆண்டுகளில் ₹1.2 கோடியைச் சேர்க்கலாம் என்கிறார்.

கௌஷிக் சொல்லும் முதலீடு முறை எளிமையானது. அதிக லாபம் தரும் முதலீடுகள் பின்னால் போவதற்குப் பதில் பொறுமை, சீரான முதலீடு செய்வதே மிடில் கிளாஸ் மக்களுக்குச் சரியானதாக இருக்கும் என்கிறார்.

 

 

 

No comments