Breaking News

சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்?


என்னுடைய நண்பனுக்கு 45 வயதாகிறது. அவனுக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அதற்காக மருத்துவரை அணுகாமல் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பது, வெந்தயம் சாப்பிடுவது, நாவல் பழம் சாப்பிடுவது என சுயவைத்தியங்களை மட்டுமே பின்பற்றி வருகிறான்.

இந்த உணவுகள் எல்லாம் உண்மையிலேயே ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

 சண்முகம்

நீங்கள் குறிப்பிட்டுள்ள வெந்தயம், நாவல் பழ விதை, வெண்டைக்காய் என எல்லாவற்றிலும் நார்ச்சத்து உள்ளது. கசப்புத்தன்மையும் நார்ச்சத்தும் உள்ள எல்லா உணவுகளுக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இருக்கும். நாவல்பழத்தில் சர்க்கரை இருக்கும். ஆனால் அதன் விதையில் நார்ச்சத்து இருப்பதால் அதைப் பொடித்துச் சாப்பிடலாம்.

பலாப்பழத்தில் சர்க்கரை அதிகம் என்பதால்தான் சர்க்கரை நோயாளிகள் அதைச் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் பலாக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். வெந்தயத்திலும், சீரகத்திலும் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவற்றையும் சர்க்கரைநோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவை மட்டுமே ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்துவிடும் என்று சொல்வதற்கில்லை.

வெந்தயம்

இவை எல்லாமே 20 சதவிகிதம் வரை சர்க்கரை அளவைக் குறைக்கும். அதற்காக ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொள்வதால் தலா 20 சதவிகிதம் சர்க்கரை குறையும் என அர்த்தமில்லை. தனித்தனியாக எடுத்துக்கொண்டாலும், சேர்த்து எடுத்துக்கொண்டாலும் இவற்றால் 20 சதவிகிதம் வரை மட்டுமே சர்க்கரை அளவு குறையும்.

இவை எல்லாம் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிஸ் ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு ஓகே. அதாவது ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். அதுவே சர்க்கரைநோயாளியாக மாறியவர்கள் இவற்றை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பது தவறு. இந்த உணவுகள் எல்லாம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவும் என்றாலும் இவை மட்டுமே மருந்தாகாது என்பதை சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சர்க்கரைநோய்

சர்க்கரை அளவை பரிசோதித்து மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு, கூடவே இந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் நண்பர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார். அவருக்கு இதைப் புரியவைத்து மருத்துவ ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.

No comments