Breaking News

பர்சனல் லோன் வாங்க போறீங்களா? - அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!


டமானம் வைக்க எந்தவித சொத்தோ, பொருளோ இல்லாத போதிலும், நம்முடைய வருமானம் மற்றும் வரவு, செலவு நாணயத்திற்கு அடையாளமாக திகழும் சிபில் ஸ்கோர் போன்றவற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.
பெயரளவில் தனிநபர் கடனாக இருந்தாலும், தனிநபருக்கு மட்டுமல்லாமல், பெரும்பாலான சூழலில் ஒட்டுமொத்த குடும்பத்தின் பணத் தேவைகளை பூர்த்தி செய்வதாக இது அமைகிறது. நம்முடைய தரவுகளை வங்கிகள் மிகக் கவனமாக பரிசீலனை செய்த பிறகு தான் நமக்கு தனிநபர் கடனை வழங்குகின்றன. அதே சமயம், எப்படியாவது கடன் பெற்றுவிட வேண்டும் என்று துடியாய், துடிக்கின்ற நாம், அந்த கடன் திட்டத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்து பெரிய அளவுக்கு விசாரிக்காமல் விட்டு விடுகிறோம். ஆனால், தனிநபர் கடன் பெறும் முன்பாக அந்தத் திட்டம் குறித்து நாம் விலாவாரியாக விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதனால், பின்னாளில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்க முடியும்.

வட்டி விகிதம்

தனிநபர் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி எவ்வளவு? வட்டி நிலையானதா அல்லது மாறக் கூடியதா? வட்டி விகிதத்தை பாதிக்கக் கூடிய சிறப்பு நிபந்தனைகள் ஏதேனும் இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளை நீங்கள் அவசியம் கேட்டாக வேண்டும். இதன் மூலமாக, அசலும், வட்டியுமாக சேர்த்து ஒட்டுமொத்தத்தில் நீங்கள் எவ்வளவு பணத்தை திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடன் காலம் மற்றும் திருப்பிச் செலுத்தும் வரம்புகள்

கடனை திருப்பிச் செலுத்துவதில் அதிகபட்ச காலம் எவ்வளவு மற்றும் குறைந்தபட்ச காலம் எவ்வளவு? கடன் காலம் முடியும் முன்பாக கடனை திருப்பிச் செலுத்தினால் ஏதேனும் அபராதம் விதிக்கப்படுமா? என்பதை விசாரிப்பதுடன், கடன் காலம் மற்றும் வட்டி விகிதம் நம் பொருளாதாரச் சூழலுக்கு ஒத்து வருமா என்பதை யோசிக்க வேண்டும்.

: விற்பனைக்கு வந்த உண்மையான மனித மண்டை ஓடு! உறைந்து போன கஸ்டமர்

கட்டணம்

தனிநபர் கடனை பரிசீலனை செய்வதற்கான கட்டணம் எவ்வளவு? ஏதேனும் மறைமுக கட்டணம் இருக்கிறதா, தவணைக் கட்டணத்தை தாமதமாக கட்டினால் அபராதம் விதிக்கப்படுமா என்ற விஷயங்களை நீங்கள் தெளிவாக கவனிக்க வேண்டும்.

தவணைத் தொகை

குறைந்த கால வரம்பில் கடனை திருப்பிச் செலுத்தினால் கடன் துரிதமாக முடியும். ஆனால், நீங்கள் பெரும் தொகையை தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். அதிக கால வரம்பில் கடன் பெற்றால், செலுத்த வேண்டிய தொகை குறைவாக இருந்தாலும், வட்டி கூடுதலாக இருக்கும்.

தகுதிக்கான விதிமுறைகள்

தனிநபர் கடன் பெறுவதற்கான தகுதிகள் என்ன? இதற்கு உறுதி கூறும் ஆவணம் எதுவும் தேவையா? வயது, வருமானம், சிபில் ஸ்கோர், வேலை நிலை போன்றவற்றில் காணப்படும் தகுதி நிலை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

No comments