Breaking News

பழைய ஓய்வூதிய திட்ட வழக்கில் அப்பீல்; காவலர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில், 2003ல் பணியில் சேர்ந்த காவலர்களை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், 2003 டிச., 1ம் தேதி, காவல் துறையில், 8,431 ஆண் காவலர்கள் புதிதாக பணியில் சேர்ந்தனர். பணியில் சேர ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தனர்.

பணிக்கு விண்ணப்பித்த போது, பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது என, அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அவர்களுக்கு பின், 2003 மார்ச், 3ம் தேதி விண்ணப்பித்த, பெண் காவலர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தனர்.

ஆனால், 8,431 காவலர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கே, 2004 ஜன., 1 முதல் தான் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

எனவே, தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, 8,431 காவலர்களில் 25 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

காவலர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு, நாங்கள் பொறுப்பாக முடியாது. பல மாநிலங்களில் இதே போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க தீர்ப்பளித்துள்ளன என, காவலர்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, 'வழக்கு தொடர்ந்த 25 பேரையும், 12 வாரத்துக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து, பொது சேம நல நிதியாக மாற்ற வேண்டும்' என, இந்தாண்டு பிப்., 10ல் உத்தரவிட்டார்.

அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன் வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழக அரசு இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்தனர். அதை ஏற்று வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்' என, தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது.

தற்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தும்படி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்திருப்பது, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு மட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'குறைவான எண்ணிக்கையிலான காவலர்களுக்கே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது எனக்கூறி, மேல் முறையீடு செய்யவுள்ள அரசு, 6.30 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றும்' என, பங்களிப்பு ஓய்வூதியம் ஒழிப்பு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது; கண்டனமும் தெரிவித்துள்ளது.

No comments