Breaking News

ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி :

1500x900_1489537-stage
 

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 390 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தி.மு.க. எம்.எல்.ஏ. அண்ணாநகர் மோகன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்கள்.

அமைச்சர் உறுதி

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்படுத்தி தந்தார். பள்ளிக்கல்வித்துறை என்கிற இந்த குடும்பம் இன்றைக்கு நலமாக, எந்த நோயும் தீண்டாமல் பார்த்துக் கொள்கிறார். நான் இந்த விருது வழங்கும் விழாவை பற்றி முதல்-அமைச்சரிடம் சொல்வதற்கு சென்றேன். அப்போது அவரிடம், 390 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க போகிறோம் என்று கூறினேன். அதற்கு அவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று சொல்லுங்கள். இதுதான் கருணாநிதி சொன்னது.' என்றார். முதல்-அமைச்சரை பொறுத்தவரையில் எல்லோரும் நல்லாசிரியர்கள்தான்.

கருணாநிதி வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர், கண்டிப்பாக ஆசிரியர்களை கைவிட மாட்டார். நீங்கள் (ஆசிரியர்கள்) வைத்துள்ள கோரிக்கைகளை வகைப்படுத்தி அதில் 5 கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு இன்றைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நிதி நிலைக்கு ஏற்ப உங்களுடைய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசினார். தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றியுரை ஆற்றினார்.

No comments