கையில் பணம் தங்காமல் விரயம் ஆகிறதா..? இந்த ஓட்டைகளை சரி பண்ணுங்க..!
'சம்பளம் கைக்கு வர்றதும் தெரியல...போறதும் தெரியல' என்கிற மனக்குமுறல் இல்லாத மனிதர்களே இன்றைக்கு இல்லை.
யாரும் நம் பையில் உள்ள பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுவதில்லை. நாமேதான் மாய்ந்து மாய்ந்து செலவு செய்கிறோம். கையில் இருக்கும் பணம் அத்தனையும் தீர்ந்தவுடன், பணம் எங்கே போச்சு என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். அப்படி நாம் என்னதான் செலவு செய்துவிடுகிறோம்?
நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்''இன்றைய நிலையில், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மனிதர்கள் செய்யும் செலவு கொஞ்சமல்ல. இந்தச் செலவுகளைக் கொஞ்சம் ஞாபகப்படுத்தி பட்டியல் போட்டு, இவற்றுக்கெல்லாம் ஒரு பெரிய நோ சொன்னாலே போதும், உங்கள் கையில் காசில்லை என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது'' என்று சொன்னபடி, இன்றைக்கு நம்மில் பலரும் செய்யும் அநாவசிய செலவுகளைப் பட்டியல் போடுகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன். அந்தப் பட்டியல் இனி...
இன்று பெரும்பாலான வீடுகளில் ஆண்-பெண் என இருவரும் வேலைக்குச் செல்வதால், சமையல்காரர்களைப் பணிக்கு அமர்த்துகின்றனர். என்னதான் சமையல்காரர்கள் இருந்தாலும் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும் குறைவில்லை.
இப்போது ஆடைகள் வாங்கிக் குவிப்பது புது பேஷன் ஆகிவிட்டது என்றே கூறலாம். மாதம் ஒரு ஆடை, ஆடி தள்ளுபடியில் ஒரு ஆடை, ஆன்லைன் ஸ்டோரில் ஒரு ஆடை என ஆடைகள் வாங்கி குவித்து, புது ஆடைக்காகவே தினம் ஒரு விழா அல்லது திருநாளை உருவாக்கிக் கொண்டிருக்கோம்.
எப்போதுமே திரைப்படத்திற்கு என தனி மவுசு உண்டு. புது படங்கள், வெப் சீரிஸ் ஆகிய அனைத்தையும் பார்க்க அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றை சப்ஸ்கிரைப் செய்துவிடுகிறோம். இருந்தும் 'தியேட்டர் ஃபீல் வேணும்' என்று பாப்கார்னுடன் தியேட்டருக்குப் படை எடுக்கிறோம்.
'டாக்டர் தினமும் வாக்கிங் போக சொல்லி இருக்காரு', 'உடம்பை ஃபிட்டா வெச்சுக்க தினமும் வாக்கிங் போறேன்' என்று சொல்லிக்கொண்டு, வாக்கிங் போகவே காரில் செல்கிறோம். எதற்கு இந்த வீண்செலவு?
யோகா, ஜிம், பாட்டு கிளாஸ் என பல கிளாஸ்களில் சேர்ந்து காசு கட்டிவிட்டு, 'கிளாஸ் போகவே டைம் இல்ல', 'ஒரு கிளாஸ் போனா, இன்னொரு கிளாஸ் போக முடியறது இல்ல' என்று புலம்புகிறோமே!
தியேட்டர், பீச் போன்ற இடங்களுக்கு சென்று வயிறு நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிட்டபிறகும், சம்பிரதாயம் போல கட்டாயம் ஹோட்டலுக்கு சென்றுகொண்டிருக்கோம்.
'வாங்குவேன்...யூஸ் பண்ணுவேன்...ரிப்பீட்டு' என்பது போல பலர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மொபைல் போனை மாத்திக்கொண்டிருக்கிறோம். ஏன்?
வீட்டில் கார், பைக் இருந்தாலும் ஓலா, ஊபர் பயன்படுத்திக்கொண்டேதான் இருக்கிறோம்.
இது மாதிரி செய்யும் செலவுகளுக்கெல்லாம் ஒரு 'No' சொன்னால் நாம் நிறைய சேமிப்போம்'' என்று முடித்தார் சுந்தரி ஜகதீசன்.
கையில் காசு தங்கலையே என்று கவலைப்படுகிறவர்கள் இந்த விஷயங்களை நிச்சயம் கவனிக்கலாம்!
No comments