மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடப்புத்தக உருவாக்க பணி: டிச.26-க்குள் விண்ணப்பிக்கலாம் :
புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிச.26-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை - 2025-ன்படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பவர்கள், தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், கற்பித்தல் அனுபவம், மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் நிபுணத்துவம், பாடப்புத்தகம், இதர புத்தக உருவாக்கப் பணிகளில் அவர்களின் பங்களிப்பு, சமர்ப்பிக்கப்படும் பாட வரைவின் மீதான மதிப்பீடு ஆகியவை ஒருங்கே பரிசீலிக்கப்பட்டு தேவைக்கேற்ப, வல்லுநர்கள் இப்பணிக் கெனத் தெரிவு செய்யப்படுவார்கள்.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அடுத்தநிலை பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பாடவாரியாகத் தெரிவிக்கப்படும் தலைப்புகளில் மாதிரிப் பாட வரைவை தயார் செய்து, டிச.26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பாட தலைப்பு மற்றும் மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments