Breaking News

தமிழக பள்ளிகளுக்கு கல்வித் துறை முக்கிய சர்குலர்: 'ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் தினமும் இந்தப் பாடல்களை மாணவர்கள் பாட வேண்டும்'

 


தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ (Physical or Psychological Harassment) எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித் துறையின் தனியார் பள்ளிகள் இயக்குநர் பெ.குப்புசாமி சார்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய நன்னெறி வழிகாட்டுதல்கள் மற்றும் பொது அறிவுரைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

மாணவர் மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள்

தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் நற்பண்புகள் மற்றும் செயல்பாடுகளை ஆக்கப்பூர்வமான முறையில் வழிநடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நன்னெறிக் கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தினசரி காலை வணக்கக் கூட்டம்
 
தனியார் பள்ளிகளில் தினந்தோறும் காலை வணக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

விளையாட்டு மைதானத்தில், அனைத்து மாணவர்களையும் அவர்களின் உயரங்களின் அடிப்படையில் வரிசையாக நிற்க வைக்க வேண்டும்.

  • தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண் ஆகியவற்றை மாணவர்களே பாட வேண்டும். இதற்காக ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.

அன்றைய நாளேடுகளில் வெளியாகி இருக்கும் கல்வி, அறிவியல், விளையாட்டுச் செய்திகள் மற்றும் தேர்வு அட்டவணை போன்ற முக்கியச் செய்திகளை மாணவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும்.

ஊக்குவிப்பும் நல்லிணக்கமும்

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், நன்னடத்தை, அதிக மதிப்பெண், விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, மற்ற மாணவர்களுக்கும் உற்சாகம் அளிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களிடையே நிலவும் சாதி, சமூக வேறுபாடுகளைக் களைந்து, நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பது குறித்து மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விளக்கிக் கூற வேண்டும்.

கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்

ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் யாரும் மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ எவ்விதத் துன்புறுத்தலும் செய்யக் கூடாது.

மாணவர்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுவதற்காக மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை நடத்த வேண்டும்.

பேருந்து பாதுகாப்பும் கண்காணிப்பும்

பள்ளிப் பேருந்துகளில் மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் வந்து செல்வதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி அங்கும் இங்குமாக ஓடாமல், உதவியாளர் துணையுடன் வகுப்பறைக்கு வருவதற்கு ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயம் பெண் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

No comments