அரசு பள்ளிகளுக்கு பறந்த 3 முக்கிய உத்தரவு - ஒரு குட் நியூஸூம் இருக்கு..!
தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது. 01.12.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தால் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் குறித்த அறிவுறுத்தல் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம் அறிவுறுத்தல்
முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியை தினசரி கண்காணிக்கும்போது, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மையங்களிலுள்ள 4,327 பள்ளிகளில் 4,68,544 மாணவ / மாணவியர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2.87,997 மாணவ / மாணவியர் மட்டுமே உணவு உட்கொண்டதாக செயலியில் பதிவு செய்யப்பட்டு, 60% மட்டுமே பயனாளிகள் என உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு குறைந்த சதவீதம் பதிவாவதற்கு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் "சரக்கு இருப்பு தொகுதி (Inventory Module)" வெளியிடுதல் முன்னோடி (Plot) திட்டமாக செயல்படுத்தப்பட்டதில் இருந்து சிக்கல் ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA) மூலம் தெரிவிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து. பார்வையில் காணும் 07.11.2025 நாளிட்ட கடிதத்தின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வருகை தரும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், செயலியில் உணவு உட்கொண்ட மாணவ / மாணவியர் எண்ணிக்கையை சரியாக பதிவிடுவது, அந்தந்த பள்ளியின் பொறுப்பாளரின் (School In-charge) பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்துடன் இணைப்பில் குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் 01.11.2025 முதல் 21.1.2025 வரை உள்ள பதிவுகளை ஆய்வு செய்தபோது, 584 பள்ளிகளில் தரவு தாமதமாக பதிவேற்றப்பட்டதும், 478 பள்ளிகளில் எந்தத் தரவும் பதிவேற்றப்படாததும் கண்டறியப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் உள்ளீடு செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஒருங்கிணைந்த சமையலறை பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மையப்பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி பொறுப்பாளர்களுக்கு (School In-charge) உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, தேவையான பயிற்சி/வழிகாட்டலை ஏற்பாடு செய்து, அனைத்து பள்ளிகளிலும் தினந்தோறும் காலை உணவு உட்கொள்ளும் மாணவ / மாணவியர் எண்ணிக்கையினை சரியாக செயலியில் பதிவு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
1. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.
2. பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு pathe பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
3. தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து விழிப்புணர்வினை காலை வணக்கக்கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
4. தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவர் உட்பட்டிருப்பின் அதை எவ்வித தயக்ககமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
5. பள்ளியினை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக சார்ந்த உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
6. மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ, உணவளிப்பதோ தவிர்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்குதல் வேண்டும்.
7. ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வினை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
8. பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்காண் வழக்கின் அறிவுரையின்படி ஒரு நோடல் அதிகாரியை (Nodal Officer) நியமித்து, வளாகத்தின் பராமரிப்பு, தூய்மை மற்றும் தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வையிட வேண்டும். மேற்கூறிய அதிகாரியின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வண்ணம் இருத்தல் வேண்டும். மேலும் சார்ந்த அலுவலர் குறித்த விவரங்கள் சார்ந்த உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவித்திடல் வேண்டும்.
இந்த வழிமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments