பொதுத்தேர்வு ரிசல்டை அதிகரிக்க அதிகாரிகள் படை களமிறக்கம் :
தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை ஊக்கப்படுத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு அதிகரிக்க வேண்டும் என்பதில், பள்ளிக்கல்வி துறை தீவிரமாக உள்ளது. இதற்காக, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கற்றல் திறனை அறிய, ஒவ்வொரு மாதமும் தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர்களை பெற்று, அவர்கள் தேர்ச்சி பெற, முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த மாணவர்களுக்கு, காலை, மாலை நேரடியாகவும், 'வாட்ஸாப்' குழுக்களின் வாயிலாகவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 'வாகை சூடுவோம்' திட்டம் வாயிலாகவும்.
முக்கிய வினாக்களுக்கு விடைக்குறிப்புகள் வழங்கி, மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றாததால், முதன்மை கல்வி அலுவலர்களால் தலைமை ஆசிரியர்களிடம் வேலை வாங்க முடியாத சூழல் உள்ளது.
எனவே, கல்வித்துறையை மட்டுமே நம்பாமல், எந்தெந்த மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளதோ, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக, பின்தங்கியுள்ள பள்ளிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வி துறை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 40 பள்ளிகளுக்கு, தனித்தனி சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநகராட்சி கமிஷனர், துணை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்றோர், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், 'இன்று முதல் பொதுத்தேர்வு வரை, அவர்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிகளுக்கு சென்று, அனைவரும் தேர்ச்சி பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமைப்படுத்துவதா?
நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின், மாநில துணை பொதுச்செயலர் தங்கபாண்டியன் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளனர். அவர்கள், துறையின் செயல்பாடுகளை அறிந்தவர்கள். அவர்கள் வாயிலாக நடவடிக்கை எடுப்பது தான் முறை. ஆனால், கல்வித்துறைக்கு தொடர்பில்லாத அலுவலர்களை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிப்பது, கல்வித்துறை அதிகாரிகளின் திறமையையும், தலைமை ஆசிரியர்களின் தகுதியையும் குறைப்பதாக உள்ளது. பொதுவாக, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆர்.டி.ஓ., ஊதிய விகிதத்தில் பணியாற்றுபவர். அவரை கண்காணிக்க, அவரை விட கீழ்நிலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை கலெக்டர் நியமித்துள்ளார். இதுபோல, மற்ற துறைகளை ஆய்வு செய்ய, கல்வித்துறை அலுவலர்களை நியமித்தால், அவர்கள் ஏற்பரா. அனைத்து நிலை பணியாளர்களையும் உருவாக்கும் ஆசிரியர்களை, இதுபோன்ற குழு அமைத்து சிறுமைப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
'ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன'
திருப்பூர் மாவட்ட கலெக்டர் மணீஷ் நாரணவாரே கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில தேர்ச்சி பட்டியலில், திருப்பூர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் வந்த நிலையில், தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதை மீட்டு, முதலிடத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும். அதற்காக, காலாண்டு தேர்வு தேர்ச்சி விபரங்களை சேகரித்து ஆராய்ந்ததில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 பள்ளிகளில், மாணவர்களின் வருகையும், தேர்ச்சியும் குறைவாகவும் உள்ளது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், அனைத்து துறை அதிகாரிகளையும், மாணவர்களின் மேம்பாட்டு பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். அவர்கள் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி அதிகரிக்க நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.
.png)
No comments