தனியொரு ஆசிரியரின் வழக்கிற்கான தீர்ப்பா? அல்லது இனி யாரும் வழக்குத் தொடுக்கவே கூடாது என்பதற்கான எச்சரிப்பா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும், மக்கள் மீதான அதன் நிருவாகச் செயல்பாடுகளும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்யும் பொறுப்பை வழக்காடு மன்றத்திற்கு வழங்கியுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம்.
அப்பொறுப்பை நிறைவேற்றும் பணியைச் செய்பவர்களே நீதிபதி என்று அழைக்கப்படும் வழக்காடு மன்றத் தீர்ப்பாளர்கள். அவர்கள் விசாரித்து வழங்கும் தீர்ப்புகள் பெரும்பாலும் சட்டத்தின்படி இருக்கும் என்பதால்தான் வழக்காடு மன்றங்களுக்குண்டான மாண்பும் மரியாதையும் பொதுமக்களிடம் இன்றளவும் நிலைத்திருக்கிறது.அரசு ஊழியனோ, சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினரோ, வழக்காடு மன்றத் தீர்ப்பாளரோ யாராக இருப்பினும் அனைவருமே மக்களாட்சியில் மக்களுக்கான சேவைகளைச் செய்யும் மக்கள் பணியாளர்களே! People's Servant தான். ஆனால், நடைமுறையில் அவர்கள் வகிக்கும் பதவி மீதான தற்பெருமையால் தமது பொறுப்பை உணராது, தாம் ஏதோ மன்னர் போலவும் மக்களைத் தமது அடிமைகள் போலவும் எண்ணத் தொடங்கிவிடுகின்றனர். இந்தத் தவறான எண்ணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துவர்.
ஒருசில வழக்காடு மன்றத் தீர்ப்பாளர்களோ தனக்கு வந்த வழக்கு பற்றி தீர்ப்பு கூறுவதோடே கருத்து சொல்கிறேன் என்ற பேரில் வழக்கிற்குச் சற்றும் தொடர்பற்ற அறிவுரைகளை வழங்கி தமது ஆண்டான் - அடிமை எண்ணத்தை வெளிப்படுத்திவருவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் சிலர் குறிப்பிட்ட பிரிவினருக்கு / தாம் சார்ந்திருக்கும் சித்தாந்தத்திற்கு விசுவாசம் காட்ட, அவர்களின் எதிர்த்தரப்புகள் மீதுமட்டுமே கருத்து தெரிவிப்பது என்பது வழக்காடு மன்றங்கள் மீதான மாண்பையே குறைக்க வழிவகுப்பதோடே, அதன்மீதான மக்களின் நம்பிக்கையையும் கெடுத்துவிடக்கூடும்.
அண்மையில் உச்ச வழக்காடு மன்றம் வெளியிட்ட தீர்ப்பொன்றில் தீர்ப்பாளர்கள் வழக்கிற்குத் தொடர்பற்று சுய கருத்துகள் தெரிவிப்பதைக் காட்டமாகக் கண்டித்திருந்தது.
ஆதார் அட்டையை நிர்பந்திக்க வேண்டாமென வழக்கு தொடுத்தால், வழக்கு தொடுத்தவரின் பணியை ஆராய்ந்து அறிக்கையளிக்கச் சொல்லிய கதையை ஒரு சில வருடங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
மேலும், நடிகர் விஜய் நுழைவுவரிக்கு விலக்கு கோரி தொடுத்த வழக்கில் தீர்ப்பாளர் தனது தீர்ப்பில் தெரிவித்த அவரது சொந்தக் கருத்தான. . . வழக்குத் தொடுத்த நடிகர் விஜய் மீதான விமர்சனக் கருத்துகளைத் தெரிவிக்க, அதை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்ய இருவர் அமர்வு முந்தைய தீர்ப்பாளரின் கருத்தை நீக்கித் தீர்ப்பளித்ததையும் நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். அதேபோல தற்போது மற்றுமொரு வழக்கு.
ஆசிரியர் ஒருவர் தான் பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்து ஊதியம் வழங்க வேண்டுமென வழக்கு தொடுக்கிறார். இதற்குத் தீர்ப்பு கூறிய தீர்ப்பாளர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இக்கோரிக்கை உள்ளதா, இல்லையா என்பதைப் பற்றி தீர்ப்பு கூறுவதோடே, தமது உள்ளார்ந்த எண்ணங்களைத் தீர்த்துக் கொள்ள இவ்வழக்கிற்குச் சற்றும் தொடர்பற்ற விடயங்களைத் தீர்ப்பிலேயே கூறியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் வழக்காடு மன்றம் மீதான அதிருப்தியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளதோடே பின்வரும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஆசிரியர் தொழிலை புனிதமானதாகக் கருதும் தீர்ப்பாளர் அரசமைப்புச் சட்டத்தையோ அதைக் காக்கவேண்டிய வழக்காடு மன்றத்தையோ புனிதமாகக் கருதியிருப்பின், தன்னிடம் வந்த வழக்கின் மீதான தீர்ப்பில் உச்ச வழக்காடு மன்றத் தீர்ப்பையும்மீறி வழக்கிற்குத் தொடர்பற்று தன் மனம்போனபோக்கில் கருத்து கூறியிருப்பாரா?
முதுகலை ஆசிரியர் வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணியாற்றிவிட்டு இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுவதாக வருத்தப்படும்முன்பு, 'தன்னைப் போன்ற தீர்ப்பாளர்கள் வாரத்திற்கு எத்தனை மணி நேரம் வழக்கை விசாரிக்கின்றனர்? தமது மாத ஊதியம் என்ன? பெறக்கூடிய படிகள் & சலுகைகள் என்னென்ன? எதற்காகத் தங்களுக்குக் கோடைகால விடுமுறையெல்லாம் விடப்படுகின்றது? கோடைகால விடுமுறை மற்றும் இதர அரசு & வார விடுமுறை நாள்களுக்கான ஊதியங்களைத் தீர்ப்பாளர்கள் திருப்பி அரசிற்கே செலுத்திவிடுகின்றனரா?' என்பதைப் பற்றியெல்லாம் கூறாமல், கருத்து எனும்பேரில் வழக்கு தொடுத்தவரின் பணி பற்றி மட்டும் விமர்சிப்பது சரியா. . .?
வாரத்தின் 168 மணி நேரத்தில் 14 மணி நேரம் மட்டுமே முதுகலை ஆசிரியர் பணியாற்றுவதாக வருத்தப்படும் தீர்ப்பாளர், ஆசிரியர்கள் அனைவரையும் பகுதிநேர ஆசிரியராக அறிவித்து வாரத்தில் 14 மணி நேரம் மட்டும் பள்ளியில் இருங்கள் மற்ற நேரம் உங்கள் சொந்த அலுவலைப் பார்த்துக் கொள்ளுங்கள் என தீர்ப்பளிக்கக்கூடுமா? ஆசிரியர் பணி என்பது நாளொன்றிற்கு சுமார் 2:15 மணி நேரம் பயிற்றுவிப்பது மட்டுமே என்று கூறுவதன் வழி 9:10 - 4:10 வரையான 7 மணி நேர பள்ளிச் செயல்பாட்டில் மீதியுள்ள சுமார் 4:45 மணி நேரத்தை யாருக்கானதாக ஒதுக்கியுள்ளார்?
வரி செலுத்துவோர் அளிக்கும் வரிப்பணத்திலிருந்து ஊதியமளிப்பதாகத் தெரிவிக்கும் தீர்ப்பாளருக்கு ஆசிரியர் கட்டும் தொழில் வரியும், தனது 1-2 மாத ஊதியத்தை முழுமையாக வருமானவரியாகக் கட்டி வருவது தெரியாதா? ஏதோ மற்றவர் மட்டுமே வரிகட்டுவதைப் போன்றும் அரசுப் பணியேற்றவர் & அவர் குடும்பத்தார் வாங்கும் எந்தவொரு பொருளுக்கும் அரசு GST-ல் விலக்கு அளித்துவிட்டது போன்றும் பேசுவது சரியா? காலையில் பல்துலக்கும் பற்பசை முதல் இரவு உறங்கும் போது பற்றவைக்கும் கொசுவர்த்தி வரை அனைத்திற்கும் வரி செலுத்துவதோடே, தொழில் வரியும், வருமானவரியும் பைசா பாக்கியின்றி அந்தந்த நிதியாண்டிற்குள் அரசிற்குச் செலுத்திவருவது ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும்தான் என்பது தீர்ப்பாளருக்குத் தெரியாதா? மேலும், ஆசிரியருக்கோ / அரசு ஊழியருக்கோ வழங்கப்படும் ஊதியம் அவர்களால் மட்டுமே மென்று விழுங்கப்படுவதில்லை. அதுதான் இந்திய ஒன்றியப் பொருளாதாரச் சுழற்சிக்கான மிக முக்கிய காரணியென்று தெரியாதா?
தனியார் துறையைவிட கூடுதலாக ஊதியம் பெறுவதாக ஆசிரியர்களைக் கேள்விக்குட்படுத்தும் தீர்ப்பாளர் அரசமைப்புச் சட்டமும், சர்வதேசத் தொழிலாளர் நல உரிமைகளும் வழங்கியுள்ள குறைந்தபட்ச வேலைநேரம் & அடிப்படைச் சம்பளம் குறித்து படித்துத் தெளிவுள்ளவரெனில், தனியார் துறை ஊழியர்களின் நியாயமான வேலைநேரம் & ஊதியம் குறித்து தாமே முன்வந்து வழக்கெடுத்து தீர்ப்பு வழங்கியுள்ளாரா? இனியேனும் வழக்கெடுக்க முன்வருவாரா?
ஆசிரியர்களுக்கான Accountability பற்றி கவலைப்படும் தீர்ப்பாளருக்கு, ஒரு ஆசிரியர் தம்மிடம் அளிக்கப்படும் மாணவர்களுக்குக் கற்பித்துத் தமது பணிப் பொறுப்பை நிறைவு செய்ய ஒற்றைக் கல்வியாண்டுதான் இலக்கு என்பது தெரியாதா? அதே போன்று தமது மன்றத்திற்கு வரும் வழக்குகளை விசாரித்து முடித்து வைக்கக் கால அவகாசம் ஏதும் தீர்ப்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு நிர்ணயித்திருந்தால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக் கணக்கான வழக்குகள் இன்னமும் தீர்ப்பளிக்கப்படாது ஆண்டுக்கணக்கில் வழக்காடு மன்றங்களில் தேங்கிக் கிடக்குமா என்ன?
கொரோனா காலத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கியதற்காகக் கவலைப்படும் தீர்ப்பாளரும், தன்னைப் போன்ற மற்ற அனைத்துத் தீர்ப்பாளர்களும் கொரோனா கால ஊதியத்தையும் படிகளையும் முழுமையாக CMPRF-க்கு அள்ளித்தந்துவிட்டுத்தான் ஆசிரியர்கள் பற்றி கவலைப்படுகிறாரா? வீட்டிலிருந்தே காணொளிக் காட்சி வழியே வழக்கை விசாரித்த தீர்ப்பாளர்களின் ஊதியம் தவிர்த்த பிறபடிகளெல்லாம் அரசிற்குத் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டதா?
கொரோனா காலத்தில் ஊக்க ஊதியம், வளரூதியம், பஞ்சப்படி, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை இழந்தாலும் மாணவர்களின் வீடுதேடிச் சென்று கல்வி போதித்த ஆசிரியர்களைக் கேள்விக்குட்படுத்தும் தீர்ப்பாளர் த.நா.அரசின் எட்டாவது ஊதியமாற்றக்குழுவில் மற்றவரெல்லாம் 20 மாத ஊதியத்தை இழந்து நிற்கத் தாம் உட்பட ஏனைய தீர்ப்பாளர்கள் மட்டும் நயாபைசா மிச்சமின்றி பெற்றுக் கொண்டதை மறந்துவிட்டு ஆசிரியர்களைக் கேள்விக்குட்படுத்தலாமா?
இலட்சம் ஆசிரியர்களில் ஒருசிலர் மீதான மோசடி & பாலியல் குற்றச்சாட்டுகள் தமக்கு வலிதருவதாகக் கூறி, ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயம் மீதான ஒழுக்கம் பற்றி சந்தேகித்து, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சோதனையிடக் கூறும் தீர்ப்பாளர், குமாரசாமி மீதான கூட்டல் கழித்தல் விவகாரத்தையும், கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டையும் முன்வைத்து எண்ணிக்கையில் சிலநூறே இருக்கும் அனைத்துத் தீர்ப்பாளர்களையும் அப்படிப்பட்டவர்களாகவே மக்கள் பார்க்க வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தீர்ப்பாளர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகிறாரா?
ஆசிரியர்களின் பணி நேரத்தையும் பணியையும் ஆய்வுசெய்யக்கூறும் தீர்ப்பாளர், இது தற்போதும் நடைமுறையில் உள்ளது தான் என்பதைப்பற்றி தெரியாமல்தான் கூறுகிறாரா? வழக்கிற்குத் தொடர்பே இல்லாமல் இவ்வாறு கருத்துகூறி வழக்குத் தொடுத்த ஆசிரியரோடு, BRTE, HM, DEO, CEO, JD, Director, Commissioner, Secretary, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர் என ஒட்டுமொத்தமாக அனைவரது பணியையும் குற்றப்படுத்தும் தீர்ப்பாளர், கீழமை வழக்காடு மன்றத்தில் அளித்த தீர்ப்பை மாற்றி மேலமை வழக்காடு மன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டால், கீழமை வழக்காடு மன்ற தீர்ப்பாளர்கள் மீது தவறான தீர்ப்பு அளித்ததற்காக நடவடிக்கை எடுக்கக் கூறுவாரா?
சரி. தீர்ப்பாளர் இவ்வாறெல்லாம் கருத்து கூறியுள்ளாரே இதற்கும் அந்த ஆசிரியரின் வழக்கிற்கும் என்னதான் தொடர்பு?
வழக்கு ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் பணி வரன்முறைப் படுத்தல் & ஊதியம் பற்றியதா? ஒட்டுமொத்த ஆசிரியர்களின் ஊதியம் & ஒழுக்கம் பற்றியதா?
உச்ச வழக்காடு மன்றத்தீர்ப்பையும் மீறி தீர்ப்பாளர் ஏன் வழக்கிற்குத் தொடர்பில்லாத கருத்துகளைத் தெரிவிக்கிறார்?
இவற்றை வழக்கிற்குத் தொடர்பற்ற கருத்தாகப் பார்ப்பதா? அல்லது இனியாரும் வழக்குத் தொடுத்தால் இப்படித்தான் தொடர்பற்று விமர்சித்துக் கேள்விகேட்பேன் என்ற எச்சரிக்கையாகப் பார்ப்பதா?
தீர்ப்பாளரின் வழக்கு தொடர்பற்ற கருத்துகள் எச்சரிப்புகளென்றால் இனியாரும் தமது உரிமைக்காக வழக்காடு மன்றத்தை நாட அஞ்சமாட்டார்களா?
அத்தகைய அச்சம் மக்கள் / அரசு ஊழியர்களிடம் எழுந்தால் அவர்களுக்கான அரசமைப்புச் சட்ட உரிமைகளை உறுதிப்படுத்தித் தரப்போவது யார்?
அரசமைப்புச் சட்ட பாதுகாவலனான வழக்காடு மன்றத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாளர் வாதப்பிரதிவாதங்களை அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து பகுத்தாய்ந்து தீர்ப்பளிப்பதோடு நில்லாது, எவ்வித அடிப்படை ஆதாரமற்று & வழக்கிற்குத் தொடர்பற்று தனது மனதில்பட்ட கருத்துகளைத் தீர்ப்பில் தெரிவித்து வழக்குத் தொடுக்க வருவோரை அஞ்ச வைத்து, வழக்காடு மன்றங்களுக்குத் தூரமாக்குதல் என்பது அரசமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகாதா?
உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடான இந்திய ஒன்றியத்தில், சாமானியன் தனது உரிமையை உறுதி செய்யத் தஞ்சமடையும் இறுதியிடம் வழக்காடு மன்றங்கள் தான். அதன் மேன்மையையும் மதிப்பையும் பொதுமக்களிடையே நிலைநாட்டுவதும் உயர்த்துவதும் 100% தீர்ப்பாளர் அளிக்கும் தீர்ப்புகள் மட்டுமேதான். அத்தீர்ப்புகளோடே கருத்து எனும்பேரில் தேவையற்ற / தொடர்பற்ற அச்சத்தையும் பதற்றத்தையும் பொதுமக்களிடையே விதைத்து சாமானியனுக்கு வழக்காடு மன்றங்களை அந்நியப்படுத்திவிடாதீர்கள்!
-செல்வ.ரஞ்சித்குமார்.
True true true. Excellent
ReplyDelete