மாத வருமானத்தை திறம்பட நிர்வகிக்க உதவும் 50/30/20 பட்ஜெட் முறை!
மாதாந்திர பட்ஜெட் போடாமல் குடும்பம் நடத்தும் பலரும் மாத இறுதியில் கையில் பணமின்றி திண்டாடுகிறார்கள். தேவையான செலவிற்குக் கூட கையில் பணம் இருப்பதில்லை. இதற்குக் காரணம் முறையான பட்ஜெட் இல்லாமல் தேவைக்கு மேல் செலவு செய்வதுதான். 50/30/20 என்கிற பட்ஜெட் முறையைப் பின்பற்றினால் ஒருவர் எளிதாக தனது வருமானத்தை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும்.
50/30/20 - பட்ஜெட் முறை:
ஒருவர் தனது சம்பளப் பணத்தை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த பட்ஜெட் விதியின் மூலம் 50 சதவீதத்தை அடிப்படை தேவைகளுக்காக ஒதுக்க வேண்டும். 30 சதவீதத்தை பொழுது போக்கிற்காகவும், 20 சதவீத பணத்தை கட்டாயமாக சேமிப்பு அல்லது எதிர்காலத்திற்கான முதலீட்டிற்காக சேமிக்க வேண்டும்.
50% தேவைகள்:
ஒருவரது அடிப்படையான, அத்தியாவசியமான விஷயங்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும். வீட்டு வாடகை, கடன், உணவு, மளிகைப் பொருட்கள், காய்கறி, மின்சாரம், தண்ணீர் கட்டணம், மொபைல், பிள்ளைகளுக்கான கல்வி கட்டணம் போன்றவற்றிற்காக சம்பளத்தில் 50 சதவீதத்தை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒருவரது சம்பளம் 40,000 என்றால் 20 ஆயிரம் ரூபாயை இதற்காக ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
30% பொழுதுபோக்கு:
இந்தப் பணத்தை ஒருவர் தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது பிடித்தமான விஷயங்களுக்காக செலவு செய்து கொள்ளலாம். சினிமாவிற்கு செல்வது, ஹோட்டல்களில் உணவு உண்பது, புதிய ஆடைகள் வாங்குவது, சுற்றுலா செல்வது, பிற ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் இந்த செலவுகள் அத்தியாவசியமானவை அல்ல. இவை இல்லாவிட்டாலும் ஒருவரால் திருப்தியாக வாழ முடியும்.
எனவே இதில் சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியும். மாதத்திற்கு இரண்டு முறை சினிமா என்பதற்கு பதிலாக ஒருமுறை சினிமா, ஓட்டல் என்று வைத்துக் கொண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுற்றுலா, மூன்று மாதத்திற்கு ஒருமுறை உடை வாங்குதல் என்று பிரித்துக் கொண்டால் இந்த பணத்தில் நிறைய சேமிக்கவும் முடியும்.
20% சேமிப்பு:
தேவைகளும் விருப்பங்களும் நிகழ்கால வாழ்க்கையின் ஆசைகளைப் பூர்த்தி செய்தாலும் சேமிப்பு ஒன்று தான் ஒருவரது வளமாக வாழ வைக்கும். பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு, செலவு போக மீதி இருக்கும் பணத்தில் சேமித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதுதான். பிள்ளைகளின் எதிர்கால கல்லூரி படிப்பிற்காகவும், வீடு வாங்குவது, ஓய்வு காலத்தில் ஆகும் செலவுகள் போன்றவற்றுக்கு அதிக அளவு நிதி தேவை. 20 சதவீதம் நல்ல முதலீடுகளில் பணத்தை சேமிக்கலாம். ம்யூச்சுவல் ஃபண்ட், வங்கிகள், தபால் அலுவலகங்களில் ஆர். டி, சிறுசேமிப்பு திட்டங்கள் என முதலீட்டினை தொடங்கலாம்.
50/30/20 - பட்ஜெட் விதியின் நன்மைகள்:
மனிதர்களின் பணத்தேவையைப் பூர்த்தி செய்து பணப் பற்றாக்குறையை எத்ரிகொள்ள உதவுகிறது. இந்த பட்ஜெட் முறை பணத்தை எளிதாக நிர்வகிக்கவும், பாதுகாப்பான ஒரு நிதி ஸ்திரத்தன்மையையும் உருவாக்குகிறது. சேமிப்பு மற்றும் கடன்களுக்காக பணம் ஒதுக்குவதன் மூலம் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை அடைய உதவுகிறது
50/30/20- பட்ஜெட் விதியை பின்பற்றும்போது சரியான முறையில் ஒருவரால் பணத்தை நிர்வகிக்க முடியும். செலவுகளில் கவனமாக இருந்து சேமிப்பதில் கவனம் செலுத்த முடியும். ஒருவர் தனது சம்பளத்திலிருந்து அதிகபட்ச நன்மைகளை இதனால் அடைய முடியும். கையில் போதுமான பணமிருக்கும் போது நிம்மதியாக வாழவும் முடியும்.
No comments