Breaking News

TET | ’டெட்’ தேர்வு கட்டாயம் - அமைச்சரை தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை விடுத்த முக்கிய அறிவிப்பு!

 


2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ’டெட்’ தேர்வை கட்டாயமாக்குவது கல்வித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று பள்ளிக் கல்வித்துறை கவலை தெரிவித்துள்ளது.

து தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், நடைமுறையில் இருந்த சட்டங்கள், விதிகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீது புதிய தகுதியை விதித்து, அவர்கள் தகுதிபெறவில்லை எனில் கட்டாய ஓய்வு அளிப்பது நியாயமானது அல்ல என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால், பெருமளவிலான ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு பெற வழிவகுக்கும் என்றும், இதனால், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் ‘டெட்’ தகுதி பெற்ற ஆசிரியர்களை சமமான எண்ணிக்கையில் பணியமர்த்தி பயிற்சி அளிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் இத்தகைய சூழலை தவிர்க்காவிட்டால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், புதிய நியமனங்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச தகுதிகளை ஒழுங்குபடுத்துவதாகவும், இது ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் கட்டாய ஓய்வுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ’டெட்’ தேர்வை அறிமுகப்படுத்திய போது, அந்த தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அதன் விதிகள் பொருந்தாது என்று அறிவிக்கையில் குறிப்பிட்டிருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை, இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, நியாயமான முடிவு கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

டெட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வி துறையும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

No comments