Breaking News

பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்-பள்ளி கல்வி செயலருக்கு நோட்டீஸ் :

Tamil_News_lrg_4031338
 

பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வி துறை செயலர், நிதி துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆசிரியர் தேவராஜுலு தாக்கல் செய்த மனு:

அத்திமஞ்சேரிப்பேட்டை பகுதியில் உள்ள திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை தெலுங்கு ஆசிரியராக உள்ளேன்.

சிறுபான்மை மொழிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழக அரசு, 2003ம் ஆண்டு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்று, அதே ஆண்டு ஆக., 14ல் தெலுங்கு மொழி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.

இந்நிலையில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003ம் ஆண்டு ஏப்., 1 முதல், அதாவது முன் தேதியிட்டு ரத்து செய்து, அதே ஆண்டு ஆக., 6ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இதன் காரணமாக, என் பெயர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது. ஆனால், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே, தேர்வு நடவடிக்கையை துவக்கி விட்டதால், என் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, மனு அளித்தேன்; அதன் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது என தெரிவித்ததால், அரசு ஊழியருக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டது. முன் தேதியிட்டு பணப் பலன்களை குறைப்பது, அரசியலமைப்பு சட்ட பிரிவுகளுக்கு எதிரானது என, உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை சேர்க்க வேண்டும் என, ஏற்கனவே இந்த நீதிமன்றம், 2023ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் தகுந்த முடிவை, அரசு எடுக்க வேண்டும்' என, கடந்தாண்டு அக்., 29ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என கூறி, உயர் நீதிமன்றத்தில் தேவராஜுலு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.காசிநாதபாரதி ஆஜராகி, ''கடந்தாண்டு இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

''மனுதாரரின் மனுவை முறையாக விசாரணை செய்யாமல், அரசு அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர் என்பதால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து நீதிபதி, பள்ளி கல்வி துறை செயலர் சந்திரமோகன், நிதி துறை செயலர் உதயசந்திரன், தமிழக முதன்மை கணக்கு அதிகாரி அனிம் செரியன் ஆகியோர் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்; விசாரணையை அக்., 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments