Breaking News

வண்டில மீடியா, போலீஸ், வக்கீல்னு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கா! தயவு செஞ்சு இப்பவே கிழிச்சு போட்ருங்க! மே1 வரை டைம்!

 

ங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இதற்கான கால அவகாசம் தற்போது வழங்கப்பட்டு இருக்கின்றது. அதற்குள்ளாக வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்கள் அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே காணலாம்.

காவல்துறையின் நடவடிக்கையில் தப்பிக்க ஒரு சில வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களில் தங்களின் பணி அல்லது பதவி குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கின்றனர். இதுதவிர, கட்சி சார்ந்த சின்னங்களின் ஸ்டிக்கர்களையும் ஒரு சிலர் ஒட்டி வருகின்றனர். காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே இந்த முரண்பாடான செயலை பலர் செய்கின்றனர்.

அந்தவகையில், போலீஸ், வக்கீல், மீடியா, அட்வகேட், தலைமைச் செயலகம் மற்றும் ராணுவம் இவ்வாறு ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கின்றனர். இதுதவிர, சிலர் தங்களின் பதவிகள் மற்றும் ஜாதி பெயர்கள் உள்ளிட்டவற்றையும் ஸ்டிக்கராக வாகனங்களில் ஒட்டிக் கொள்கின்றனர். இதுபோன்ற ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களையே உடனடியாக வாகனங்களில் இருந்து அகற்ற வேண்டும் என சென்னை காவல்துறை வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. குறிப்பாக, நம்பர் பிளேட்டுகளில் பதிவெண்ணைத் தவிர வேறு எந்த ஸ்டிக்கரும் இருக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவராக இருந்தாலும் அதுபற்றிய ஸ்டிக்கரும் ஒட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கு வருகின்ற 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும் இந்த விதிமீறலில் வாகனங்கள் ஈடுபடும் எனில் மே 2 ஆம் தேதி முதல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்து இருக்கின்றது.

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 198 இன் கீழ் வழக்கு பதியப்பட்டு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், வாகன பதிவெண் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுருந்தால் மோட்டார் வாகன சட்டம் 50 யு/எஸ் 177இன் கீழ் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மாதிரியான கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் வாகன உரிமையாளர்கள், குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியிருக்கும் நபர்கள் உடனடியாக அந்த ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த விதி அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் இதுமாதிரியான ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு நடவடிக்கையில் இருந்து தப்பி வருவதாகவும், மேலும், சிலர் கட்சி மற்றும் காவல்துறை போன்ற ஸ்டிகர்களை ஒட்டிக் கொண்டு தேவையற்ற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், இதே ஸ்டிக்கர்களைக் காட்டி காவல்துறையின் கடுமையான நடவடிக்கையில் இருந்தும் அவர்கள் தப்பி வருகின்றனர்.

இதன் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தற்போது அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ள முன் வந்திருக்கின்றது. எனவே வரும் வியாழக் கிழமை முதல் சென்னை நகரத்தில் அதிரடி நடவடிக்கைகள் பல அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலும் வாகனங்களில் வக்கீல், போலீஸ் மற்றும் மீடியா என்ற ஸ்டிக்கர்களில் அதிகளவில் காணப்படுகின்றது. இதுதவிர அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் சின்னங்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைக் காட்டி அதிகாரிகளை மிரட்டுவதோடு, நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் ஆப்பு நிச்சயம் என தெரிகின்றது. இந்த விஷயத்தில் காவலர்கள், கட்சிக்காரர்கள் என்கிற எந்த சமரசமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

No comments