2025-26 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: சிபிஎஸ்இ ஆயத்தப் பணி தொடக்கம்
வரும் மே மாதம் முதல் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்களுடன் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே கல்வியாண்டில் இரண்டு பொதுத் தேர்வு நடத்துவதற்கான கல்வி சார்ந்த கட்டமைப்பை வகுக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள நடைமுறைக்கு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் இது முன்னெடுக்கப்படுகிறது.
பருவத் தேர்வு முறையை அமல் செய்யும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தும் முறையினை 2024-25 கல்வியாண்டில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் 2025-26 கல்வியாண்டுக்கு அது மாற்றப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட அமைப்பு 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு பருவத் தேர்வை முன்மொழிந்திருந்தது. இதனை புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்வினை மாணவர்கள் அழுத்தமின்றி எதிர்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் நடைமுறை கொண்டு வரப்படுவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இது ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வு போல இருக்கும். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது மாணவர்களின் விருப்பம் என்றும், அது கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்தது. இதற்கு முன்பும் பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.
No comments