ஊரே ஒன்னு கூடி விழா எடுத்தபோது திடீரென நடந்த அதிசயம்! சந்தோஷத்தில் திக்கு முக்காடி போன ஆசிரியர்!
நாம் வாழ்க்கையில் பல உயரங்களை தொடுவதற்கு ஆசிரியர்களே முதன்மையான காரணமாக உள்ளனர். ஆசிரியர்கள் ஏணிகளாக இருந்து, நாம் வாழ்க்கையில் உச்சம் தொட உதவி செய்கின்றனர்.
அப்படிப்பட்ட ஆசிரியர்களை எக்காலத்திலும் மறக்க கூடாது. ஆனால் நம்மில் நிறைய பேர் ஆசிரியர்களை மறந்து விடுகிறோம் என்பதுதான் யதார்த்தமான உண்மை.
ஆனால் ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்களோ, ஆசிரியர் ஒருவருக்கு மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர். இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சம்பவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஜேம்ஸ். இவர் பல்நாடு, அனந்த்பூர், நெல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றியுள்ளார். ஆனால் நாளையுடன் (ஏப்ரல் 30) இவர் ஓய்வு பெறவுள்ளார். இதை முன்னிட்டு ஆசிரியர் ஜேம்சுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான விழா நேற்று (ஏப்ரல் 28) நடத்தப்பட்டது.
பல்நாடு அருகே உள்ள சில்லகல்லூர்பேட்டை என்ற பகுதியில் இந்த விழா நடந்தது. விழா நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், ஆசிரியர் ஜேம்ஸின் முன்னாள் மாணவர்கள் ஒரு சிலர், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரை அங்கே கொண்டு வந்தனர். இது உங்களுக்கு நாங்கள் வழங்குகின்ற பரிசு என்று முன்னாள் மாணவர்கள் கூறியதும், ஆசிரியர் ஜேம்ஸ் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் விட்டார்.
ஆசிரியர் ஜேம்ஸிடம் படித்த மாணவர்கள் ஒரு சிலர் தற்போது மிகவும் உயர்ந்த பணிகளில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான், இந்த காரை பரிசாக வழங்கியுள்ளனர். இது குறித்து சமயம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வளவு உயர்ந்த இடங்களுக்கு சென்றாலும் கூட, தங்களுக்கு அனைத்தையும் கற்று கொடுத்த ஆசிரியர்களை மாணவர்கள் மறக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
ஆசிரியர் ஜேம்சுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி பலேனோ கார், பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 6.66 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.88 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆசிரியர் ஜேம்சுக்கு, முன்னாள் மாணவர்கள் பரிசாக வழங்கியிருப்பது மாருதி சுஸுகி பலேனோ காரின் டாப் வேரியண்ட் என கூறப்படுகிறது. இதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 12 லட்ச ரூபாய் வரும்.
இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன், மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது. இந்த காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி பலேனோ காரில் மேனுவல் (Manual) மற்றும் ஆட்டோமேட்டிக் (Automatic) கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இது பிரீமியம் ரக கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாழ்க்கையில் முன்னேற காரணமாக இருந்த ஆசிரியருக்கு சுமார் 12 லட்ச ரூபாய் மதிப்பில் கார் பரிசாக வழங்கியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான மற்றும் முன்னுதாரணமான ஒரு விஷயம்தான். ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் ஒரு சில ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments