Breaking News

ஓய்வுபெறும் ஆசிரியர்களிடம் 'பேக்கேஜ்' வசூல் முறையா? கல்வித்துறையில் கதறல்:

 

கல்வித்துறையில் ஓய்வு, விருப்ப ஓய்வு பெறும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தங்கள் பணப் பலன்களை பெறும்போது ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப 'பேக்கேஜ்' முறையில் அலுவலகங்களில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இக்கல்வியாண்டில் கல்வித்துறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இத்துறையில் மட்டுமே கல்வியாண்டிற்கு இடையே ஓய்வு பெற்றாலும் ஆசிரியர் உபரி இல்லாத நிலையில் கல்வியாண்டு முடியும் வரை பணியில் நீடிக்கலாம். அதற்கான முழு சம்பளமும் வழங்கப்படும்.

ஓய்வு பெறுவோர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்தால் அவர்களின் ஜி.பி.எப்.,பை நிறைவு செய்வது, பணிக்கொடை, சிறப்பு பி.எப்., ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு கணக்கீடு ஆவணங்கள் தயாரிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டம் என்றால் 6 ஆவணங்கள் தயாரிக்க வேண்டும். இவ்வகை ஆவணங்களை வட்டார (தொடக்க), மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலர்கள் உரிய நேரத்தில் தயாரித்து சம்பந்தப்பட்ட சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் பணப்பலன் சரியான நேரத்தில் கிடைக்கும்.

ஆனால் பணப் பலன் வழங்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிலர் ஆசிரியர்களிடம் ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை 'பேக்கேஜ்' போல் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். இல்லையென்றால் பணப் பலன் கிடைப்பதை மாதக்கணக்கில் இழுத்தடிப்பதாக மதுரை உட்பட பல மாவட்டங்களில் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் செயலாளர், இயக்குநர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளன.

ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஓய்வு பெறுவோர் பணப் பலன்களை பெறுவதற்குள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக 'பேக்கேஜ்' வசூல் தொடக்க கல்வி அலுவலங்களில் அதிகம் உள்ளன. மாநிலத்தில் மின்துறையில் மட்டும் ஓய்வு பெறும் நாளில் அவர்களுக்கு பணப் பலன்களை ஒரே நாளில் வழங்கப்படுகின்றன. கல்வித்துறையிலும் அதுபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பணப் பலன் வழங்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிலர் ஆசிரியர்களிடம் ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை 'பேக்கேஜ்' போல் நிர்ணயித்து வசூலிக்கின்றனர்.

No comments