Breaking News

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியலையா.. இதை பண்ணுங்க போதும்.. ஐடியா தரும் ஆனந்த் சீனிவாசன்

 


சேமிப்பு என்பது பலருக்கும் கஷ்டமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், எளிமையாக நாம் பணத்தைச் சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

அதை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நம் அனைவருக்கும் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பலருக்கும் அது ஆசையாக மட்டுமே இருந்துவிடும். பலராலும் பணத்தை சேமிக்கவே முடியாது. ஏழைக் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, உயர் வகுப்பினரும் இந்த சிக்கலை எதிர்கொண்டு இருப்பார்கள்.

லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கினாலும் மாத கடைசியில் திண்டாட வேண்டி இருக்கும். ஏன் இதுபோல நடக்கிறது.. முறையாகச் சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி இருக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "நமது பணத்தை சேமிக்க பெஸ்ட் வழி என்றால் அது கேகேபூ (kakeibo) தான். இந்த கேகேபூ என்பது ஜப்பானிய சேமிப்பு முறையாகும். 1900களின் தொடக்கத்தில் ஜப்பானியப் பெண் ஒருவர் எவ்வளவு செலவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ள பட்ஜெட் புக் என்றைத் தயார் செய்து வைத்திருந்தார்.

கேகேபூ: இப்போதும் இந்த கேகேபூ புத்தங்கள் இருக்கிறது. அதில் நீங்கள் காலாண்டுக்கு எவ்வளவு செலவாகிறது. அரையாண்டிற்கு எவ்வளவு செலவாகிறது. ஆண்டுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை என்பதைத் தெளிவாகப் பார்த்துக் கொள்ளலாம். தீபாவளிக்கு டிரஸ் எடுப்பது, விடுமுறைக்குச் செல்வது, இன்சூரன்ஸ் கட்டணம் போன்றவை அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை செலவு செய்வதாகும். அதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். அதன் மூலம் மீதம் எத்தனை தொகையை நாம் சேமிக்கிறோம் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.

ஜப்பானியர்கள் சேமிப்பதில் கில்லி. இத்தனை காலம் அவர்கள் சேர்த்துச் சேர்த்து பணமாக வைத்திருந்தார்கள். ஜப்பான் பொருளாதாரம் கடந்த 35 ஆண்டுகளாகச் சிக்கலில் இருந்தது. அதில் இருந்து இப்போது தான் மீண்டது. இதனால் ஜப்பானியர்கள் பணமாகச் சேமித்து வைத்தார்கள்.

நோ கிரெடிட் கார்டு: இந்த கேகேபூ முறை ஜப்பான் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்து இருக்கிறது. இதனால் தான் ஜப்பானில் யாருமே கிரெடிட் கார்ட் வாங்க மாட்டார்கள். அங்கு நீங்கள் கடைக்குச் சென்றால் கூட பணத்தை எண்ணிக் கொடுத்துத் தான் வாங்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் கார்டு எல்லாம் வாங்க மாட்டார்கள்.

எங்கள் அம்மாவும் இப்படி தான் எழுதி பட்ஜெட் போட்டுச் சேமித்தார். இடையில் நான் இதைப் பாலோ செய்யாமல் இருந்தேன். அப்போது பெரிய அடி வாங்கி, நஷ்டப்பட்டு அதன் பிறகே மீண்டும் இதை கற்றுக் கொண்டேன். இந்த கேகேபூ சேமிக்க மிக முக்கியமான ஒரு வழியாகும். பொதுவாக நமக்கு பணம் எங்கே செலவாகிறது என்றே தெரியாது. பணம் செலவழிப்பதை நாம் டிராக் செய்வதே இந்த கேகேபூ முறையின் நோக்கம். தினசரி செலவுகள் முதல் அனைத்தையும் டிராக் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

35 வயதுக்கு குறைவானவர்களா: எங்கள் தலைமுறையினர் எல்லாம் கையில் எழுதித் தான் செலவுகளை டிராக் செய்தார்கள். ஆனால் இந்த தலைமுறையினர் டிஜிட்டல் தலைமுறையினராக இருக்கிறார்கள். எனவே, 35 வயதுக்குக் குறைவானவர்கள் இதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் செலவுகளை டிராக் செய்யலாம்.

அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு மாதத்திற்குக் குறிப்பிட்ட அளவுக்குத் தான் என முடிவு செய்து வைத்து இருப்பார்கள். கடன் வாங்கி எல்லாம் செலவே செய்ய மாட்டார்கள். ஒரு டப்பாவில் மாத செலவுக்கான பணத்தைப் போட்டு வைத்துவிடுவார்கள். அந்த மாதம் முழுக்க அவர்களுக்கு அது மட்டுமே செலவுக்கான தொகை. அது காலியாகி விட்டால் நிச்சயம் செலவு செய்ய மாட்டார்கள். நகை வாங்கவும் தனியாகப் பணத்தைச் சேமித்து வைப்பார்கள்.

இவ்வளவு தான் என்று முன்கூட்டியே முடிவு செய்து வைப்பதால் கூடுதலாக எல்லாம் செலவழிக்க மாட்டோம். இதைச் செய்தால் போதும் எளிமையாக நம்மால் பணத்தைச் சேமிக்க முடியும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

No comments