Breaking News

அரசு வேலை கிடைக்க தவம் செய்ய வேண்டும்: வழிகாட்டுகிறார் அரசு பள்ளி ஆசிரியை டி.பிருந்தா :

16589972942006
பெரும்பாலான பெற்றோர் தாங்கள் அனுபவித்த கஷ்டத்தை குழந்தைகள் அனுபவிக்கக்கூடாது என நினைத்து மெனக்கெடுகிறார்கள். எல்கேஜி-யில் சேர்ப்பது முதல் கல்லூரி படிப்பை முடித்து, வேலைக்கு செல்வது வரை கூடுமானவரை வழிகாட்டுகிறார்கள்.

ஆனால் பிள்ளைகளை பொருத்தவரை சுகபோக வாழ்க்கையில் இருந்து விடுபட் டால் மட்டுமே அரசு வேலை என்ற லட்சியத்தை எட்ட முடியும் என்கிறார் கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை டி.பிருந்தா. அவரது மகள் தன்யாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நானும், கணவர் னிவாசனும் இமாசலபிரதேசம், மாலத்தீவு, பஞ்சாப், அரியானா, சென்னை என பல இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்த்தோம். இப்படி வேலைக்காக நாங்கள் அனுபவித்த கஷ்டங்களை மகள் அனுபவிக்கக்கூடாது என நினைத்தோம்.

அதற்கு தீர்வு காண எங்கள் மகளை நாங்கள் செல்லம் கொடுத்து கெடுக்கவில்லை. மாறாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தோம். இன்று சுமையாக தோன்றுவது நாளை சுகமாக மாறும் என்பதை அவளுக்கு உணர்த்தினோம்.

ஆசிரியை பிருந்தா

தற்காலிக இழப்பு

அரசு வேலை என்பது வரம். அதற்கு நாம் செய்ய வேண்டியது தவம். தற்காலிகமாக எல்லா சந்தோஷங்களையும் இழக்க வேண்டும். காலையில் விரைவாக எழுந்திருக்க வேண்டும். இரவு தூங்க நீண்டநேரம் ஆகும். பசிக்கும் நேரத்திற்கு சாப்பிட முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் நேரம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.

பட்டப்படிப்பு முடித்தும் மகளை கட்டிலில் தூங்க அனுமதிக்கவில்லை. செல்போன் பயன்படுத்தவோ, டிவி பார்க்கவோ அனுமதி கிடையாது. அந்த நேரம்எங்களை அப்படி வெறுத்துப் போய் திட்டுவாள். வங்கி தேர்வுக்கு தயாராவதற்காக திருநெல்வேலியில் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டோம். 19 தடவை முயற்சித்து, 20-வது தடவை பெடரல் வங்கி வேலைக்கு தேர்வானார்.

வேலை கிடைத்ததும், அன்றைய தினமே மகளை அழைத்துக் கொண்டு கடைவீதிக்கு சென்றோம். அவளுக்கு பிடித்தமானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தோம். அதையடுத்து இரண்டு நாட்கள் சாப்பிட, தூங்க என முழு ஓய்வில் இருந்தாள். தற்போது பெடரல் வங்கி புதுச்சேரி கிளையில் பணியாற்றுகிறார். மாத சம்பளம் சுமார் ரூ.50 ஆயிரம். வீடு, கார் என சுகபோக வாழ்க்கையை கணவருடன் சேர்ந்து அனுபவிக்கிறாள்.

எனக்கு அரசு பள்ளி வேலை கிடைக்கும்போது 35 வயது. எனது கணவருக்கோ அரசு பள்ளி வேலை கிடைக்கும்போது 45 வயது. எங்கள் மகள் 23 வயதிலேயே வேலைக்கு போய்விட்டாள். எனது தோழி பிரதீபா 50 தடவை போட்டித் தேர்வு எழுதி 51-வது தடவை தேர்ச்சி பெற்று, பெங்களூரில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார். அவர் மூலமாகத்தான் எனக்கு ஊக்கம் வந்தது. அவரைப்போலவே எனது மகளையும் படிக்க வைத்து, வேலையும் கிடைத்துவிட்டது.

இது போட்டி நிறைந்த உலகம், சில ஆயிரம் வேலைக்கு பல லட்சம் பேர் தேர்வு எழுதுவதால், கடுமையாக உழைத்தால் மட்டுமே அரசு வேலை சாத்தியம். இதை ஒவ்வொரு குழந்தையும் உணர்வதற்கு பெற்றோர் அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும். அதற்காக மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துஎதிர்விளைவுகள் ஏற்பட காரணமாகிவிடக்கூடாது. அதற்காக கூடுதல் செல் லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது.

எனது மகளுக்கு வங்கி வேலை பார்க்க ஆர்வம் இருந்ததால், சிறிய வயதிலேயே வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கி ரசீது எடுத்து அதனைப் பூர்த்தி செய்ய சொல்வேன். வங்கிப் பணியில் சேர்ந்த பிறகு அதே ரசீதில் அதிகாரியாக கையெழுத்திட்டபோது கனவு நனவானதை நினைத்து கண்கலங்கியதாகக் கூறினார். அதைக் கேட்டபோது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்று நெகிழ்வுடன் கூறினார் ஆசிரியை பிருந்தா.

No comments