Breaking News

நீண்ட நாள்கள் வரை வெங்காயம் கெடாமல் இருக்க வேண்டுமா...? இதோ சில டிப்ஸ்!

அட வெங்காயம் தானே' என்று இருந்தவர்கள் எல்லாம், வெங்காயம் தலைப்பு செய்தியில் இடம் பிடித்த பின் தான் வெங்காயத்தின் அருமையை உணர்ந்தார்கள்.

தாளிப்பு முதல் சமையல் வரை அனைத்திற்கும் வெங்காயம் என்பது அத்தியாவசிய பொருள்.

சிலர் வெங்காயத்தை வாங்கி வந்தால் சில நாட்கள் கூட நன்றாக இருக்காது. அழுகி விடும். ஆனால், உண்மையிலேயே வெங்காயத்தைச் சரியான முறையில் பாதுகாத்தால் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கெடாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார்கள்.

வெங்காயம் நீண்ட நாட்கள் வரை அழுகாமல் இருக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்…

*வெங்காயத்தை நல்ல காற்றோட்டமான, சூரிய ஒளி படாத, சுத்தமான உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். வெங்காயம் வைக்கப்படும் இடம் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது நல்லது.

*வெங்காயத்தை உருளைக்கிழங்கோடு சேர்த்து வைக்க வேண்டாம். இது வெங்காயம் கெட்டுப்போவதைத் துரிதப்படுத்தும்.

*சிலர் வெங்காயத்தை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைப்பார்கள். அப்படிச் செய்யவேண்டாம். அவை கெடாமல் இருக்கக் காற்றோட்டம் அவசியம். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து அதற்கு பதிலாகத் துளையுள்ள கூடை அல்லது காற்றோட்டமுள்ள கன்டெய்னரில் வளர்க்கலாம்.

*வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்கச் சிலர் ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பார்கள். குளிர்ச்சி மற்றும் ஈரமான சூழல் எளிதாக வெங்காயத்தைக் கெட்டுப்போகச் செய்யும், பூஞ்சை படியவும் வாய்ப்புள்ளது. எனவே வெங்காயத்தைக் காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது.

*உலர்ந்த, அளவில் பெரிதான மற்றும் தோல் அதிகமுள்ள வெங்காயத்தை வாங்குங்கள். வெங்காயத்தில் புள்ளிகள் மற்றும் ஈரப்பதம் இருந்தால் வாங்கக் கூடாது.

*வெட்டப்பட்ட வெங்காயத்தை காற்று புகாதவாறு அடைத்து கன்டெய்னரில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம் அல்லது பிளாஸ்டிக் பேக்கில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம். இப்படிச் செய்வதால் வெட்டப்பட்ட வெங்காயம் 10 நாட்கள் வரை ஃப்ரஷாக இருக்கும்.

*வெங்காயத்தில் இருந்து துர்நாற்றம் வந்தாலோ, கரும்புள்ளிகள் இருந்தாலோ, அவற்றில் இருந்து ஏதேனும் முளைவிட்டு இருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் வெங்காயம் கெட்டுப்போனதற்கான அறிகுறிகள்.

உங்கள் வீட்டில் வாங்கும் வெங்காயம் எத்தனை நாட்கள் வரை ஃப்ரஷாக இருக்கிறது... அவை கெடாமல் இருக்க நீங்கள் செய்பவை என்ன?... கமென்டில் சொல்லுங்கள்!

No comments