சூப்பர்ல! மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு 'செம' அப்டேட் கொடுத்த தமிழக அரசு.. எப்போது ரூ.1000 வரும்?
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு, அசத்தலான அப்டேட்டை கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, அதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததும், செப்டம்பர் மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. அதாவது பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு வங்கி கணக்கு சிக்கல் காரணமாக முதல் நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத நிலையில் மணி ஆர்டர் மூலமும் பணம் வழங்கப்பட்டது.
எனினும் பல இடங்களில் தகுதி நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தும் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என பெண்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்களில் குவிந்தும் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி லட்சக்கணக்கானோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இனி மாதம்தோறும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகையின் இரண்டாவது மாத உரிமைத்தொகை, அதாவது அக்டோபர் மாதத்திற்கான உரிமைத்தொகை இந்த மாதம் 14 ஆம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அதற்கு முதல் நாளான 14ஆம் தேதி சனிக்கிழமை அன்றே, குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேல்முறையீடு செய்தவர்களுக்கு பணம் வரவு வைக்கப்படுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
No comments