Breaking News

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரையை போக்க வழி என்ன?

 


னக்கு வயது இருபத்து ஆறுதான் ஆகிறது. ஆனால் இப்போதே தலையில் நரைமுடி தென்படுகிறது. தலைமுடியும் கொட்டுகிறது.

ரசாயனம் கலந்த தலைமுடிக்கான கறுப்புச் சாய மருந்துகளைப் போட பயமாயிருக்கிறது. நரைமுடி மாறவும், முடி கொட்டுவது நிற்கவும் என்ன ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

விக்னேஷ், நங்கநல்லூர்,
சென்னை.

நீங்கள் குறிப்பிடும் உபாதைக்கான ஆயுர்வேத மருந்துகளின் பயன்பாட்டுக்கான ஆரம்ப நிலையில், ஓரிரு முறை குடலை சுத்தம் செய்தவுடன் பயன்படுத்துவதே நல்ல பலனைத் தரும். பித்த தோஷத்தின் ஆதிக்ய வயதில் நீங்கள் காலடி எடுத்து வைத்திருப்பதால், குடலில் பித்த வேகம் ஏற்படும் நேரமிது. அதை நீக்கும் மருந்தாகிய 'திருவிருத் லேஹ்யம்' எனும் மருந்தை காலை உணவு செரித்து, மதியம் பசி எடுத்துள்ள நிலையில் , சுமார் இருபத்தி ஐந்து முதல் முப்பது கிராம் வரை எடுத்து நக்கிச் சாப்பிடவும்.

ஆறு முதல் எட்டு முறை நன்றாக மலம் கழித்தவுடன் அன்று மாலை சூடான புழுங்கலரிசி சாதத்தில் மிளகு, ரசம் சேர்த்த சூடான ரசம சாதம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்தத் துவையல் ஆகியவற்றைச் சாப்பிடவும். இந்த மருந்தை பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை எனத் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

'லோக பஸ்மம்' எனும் இரும்புத் தூள் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று மில்லி கிராம் எடுத்து மூன்று சிட்டிகை இந்துப்பு, இருபது கிராம் அறிசித் தூள் ஆகியவற்றைச் கலந்து இருநூறு மில்லி வினிகருடன் சேர்த்துக் காய்ச்சவும்.

வினிகர் ஐம்பது மில்லி லிட்டராகக் குறுகியதும், அனைத்தையும் அரைத்து, எண்ணெய் பிசுக்கற்ற சுத்தம் செய்த தலைமுடி வேர்ப்பகுதியில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் திரிபலைத் தண்ணீரால் (திரிபலை ஊற வைத்த வென்னீர்) காலையில் தலைமுடியைக் கழுவி விடவும். இதனால் தலைமுடி கறுப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும் என 'சரகஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

மேற்குறிப்பிட்ட அளவில் இரும்புத் தூளுடன் பத்து கிராம் திரிபலைப் பொடி சேர்த்து, வினிகர் போன்ற ஏதேனும் புளிப்பான திரவம் கலந்து, மைய அரைத்து தலைச்சாயமாக இயற்கையாகப் பயன்படுத்தலாம். முடி கொட்டுவது குறையும். முடியும் கறுப்பாக மாறும்.

'நீலிபிருங்காதி கேரதைலம்', 'பிருங்காமலகாதி கேரதைலம்' போன்ற ஆயுர்வேத மூலிகைத் தைலங்களில் ஒன்றை தலைக்குத் தேய்த்து உபயோகித்து வந்தால் முடி கறுப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

'அனு தைலம்' எனும் மூக்கினுள் விடும் மருந்தை நான்கு சொட்டுகள், காலை, இரவு உணவுக்குப் பின்னர் மூக்கினுள் விட்டு உறிஞ்சி அது தொண்டைப் பகுதிக்கு வந்தவுடன் காறித் துப்பி விடும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் உங்களுடைய உடல் உபாதை பெருமளவு குறைந்துவிடும்.

திரிபலைத் தூளுடன் அதிமதுரம் தூளாகக் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. ஐம்பது கிராம் டப்பாவில் விற்கப்படும் இந்தத் தூளில் 'அன்னபேதி சிந்தூரம்', 'லோஹபஸ்மம்', 'பிரவாள பற்பம்', 'சங்க பற்பம்', 'அப்ரக பஸ்மம்' ஆகியவற்றை வகைக்கு இரண்டு மில்லி கலந்து கொள்ளவும்.

இரவு படுக்கும் முன் இதில் ஐந்து கிராம் 'நாரசிம்ஹ ரசாயனம்' எனும் மருந்தைக் கலந்து பத்து மில்லி தேன் விட்டுக் குழைத்து, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை சாப்பிடவும். நரைத்த முடி, முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வைத் தரும்.


No comments