நீட் தேர்வில் வென்ற ஓய்வுபெற்ற ஆசிரியரின் மருத்துவ படிப்பு கனவு நனவாகிறது :
தர்மபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 61). விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், தர்மபுரி மாவட்டம் இந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஆசிரியர் பணியில் ஏணியாக இருந்து பல மாணவர்களை டாக்டராக்கிய இவரது மனதுக்குள்ளும், டாக்டராக வேண்டும் என்ற வேட்கை ஆரம்பகால முதலே இருந்து வந்தது. ஆனால் அவருடைய மாணவர் பருவத்தில் நிறைவேறாத அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தற்போதைய நீட் தேர்வு அவருக்கு உதவியது. ஆரம்ப முதலே அரசு பள்ளியில் படித்த அவர், இந்த நீட் தேர்வில் வெற்றி வாகை சூடினார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அவர் 249-வது தரவரிசையில் இருக்கிறார்.
கடந்த ஆண்டில் 436 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்த நிலையில், தற்போது இவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தர்மபுரியில் இருந்து சென்னை புறப்பட்டார்.
ஆசையை நிறைவேற்றுவதா?
அவருடன் அவர் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளியில் படித்த மாணவரும், தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான எஸ்.குமாரும் உடன் பயணித்து வந்துள்ளார். அவருக்கும் இந்த கலந்தாய்வில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
தனது நீண்ட நாள் கனவு நனவானது குறித்து ஆசிரியர் சிவபிரகாசம் ‘தினத்தந்தி' நிருபரிடம் உற்சாகமாக கூறியதாவது:-
பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக பள்ளி முடித்து பல முறை முயற்சி செய்தும் தோல்வியை தான் சந்தித்தேன். இருந்தாலும் ஆசிரியர் பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றேன். ஓய்வு பெற்று இருந்த நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைத்து, என்னுடைய டாக்டர் கனவு ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து, நீட் தேர்வுக்கு தயாரானேன். அதன்படி, நீட் தேர்வில் வெற்றி பெற்றேன். ஏதாவது ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் என்னுடைய டாக்டர் கனவு நனவாகியிருக்கிறது.
ஆனால் என்னுடைய மகன், இப்போது எதற்கு டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?. இப்போது டாக்டருக்கு படித்து, சேவை புரிந்தால் குறுகிய காலம் தான் சேவை செய்ய முடியும். ஆனால் நீங்கள் ஒரு மாணவனுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவன் உங்களைவிட அதிக ஆண்டுகள் சேவை புரிய முடியும் என்று கூறினான். இப்போது என்னுடைய மகனின் அறிவுரையை கேட்பதா? அல்லது என்னுடைய ஆசையை நிறைவேற்றுவதா? என்ற மனநிலையில் இருக்கிறேன்.
வரப்பிரசாதம்
நாளை (இன்று) கலந்தாய்வு கூட்டத்துக்கு வந்து யோசித்து முடிவு எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். ஒரு ஆசிரியராக இந்த நேரத்திலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற மனநிலையும் என்னுள்ளே அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கிறது. உண்மையில் அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். அதன் மூலமாகவே எனக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் பக்கம் இருந்து பார்க்கும்போது, நீட் தேர்வு அவர்களுக்கு கஷ்டம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கூட அந்த மாணவர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் சிவபிரகாசத்தின் மகன் எஸ்.பிரசாந்த், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டராக இருந்து வருகிறார். இதேபோல் 63 வயதை பூர்த்தி செய்த மற்றொரு நபரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று பொது பிரிவு கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
536 இடங்கள்
இன்று நடைபெற உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு தரவரிசையில் முதல் 719 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டில் 436 இடங்கள் கிடைத்தன. இந்த ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 536 இடங்கள் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைக்க இருக்கிறது.
No comments