10, 12ம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும் - அன்பில் மகேஷ் உறுதி :
சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல தங்களுக்கும் நேரடி வகுப்பு ரத்தாகலாம் என்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டினைப் போல இந்த ஆண்டும் ஆல்பாஸ் ஆகிவிடலாம் என்று மாணவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடி பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நடப்பாண்டு நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக கூறியுள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
No comments