Breaking News

கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்புகள்-மற்றும்பெருமைகள்:


கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்புகள்

1.கிருஷ்ணகிரி மாவட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் 30வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியின் மொத்த பரப்பளவு 5143 சதுர கிலோமீட்டர் ஆகும்.

2.  இந்தியாவிலேயே கொய் மலர் அதிக அளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.

3. இந்திய அளவில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கக்கூடிய மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.

4. இந்திய அளவில் மாம்பழம் மற்றும் மாம்பழ கூழ் அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டம் கிருஷ்ணகிரி.

5. புளியம்பழம் இந்திய அளவில், அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம். மேலும் இந்திய அளவில் மிக பெரிய புளி மார்க்கெட் கிருஷ்ணகிரி நகரில், பழையபேட்டையில் செயல்படுகிறது.

6. பாரடைஸ் என்று சொல்லப்படுகின்ற கிரானைட் கல் இந்தியாவிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

7. இந்தியாவில் முன்னணி தொழில் நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அதிக அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

8. உலகத்தில் உள்ள  பல நாட்டு மக்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு தொழிற்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பரந்து காணப்படுகிறது

9. கர்நாடகாவில் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழகத்தில் பல மாவட்டங்களை வளமாக்கி கொண்டிருக்கும் காவிரி ஆறு கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி  வழியாக பாய்கிறது.

10. கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா ஆந்திரா என இரண்டு மாநிலங்களை எல்லைகளாக கொண்டுள்ள ஒரு மாவட்டமாக விளங்குகிறது.

11. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஐந்து மொழிகளில் பேசக்கூடிய மக்கள் வாழக்கூடிய மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் விளங்குகிறது.

12. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் உருது ஆகிய நான்கு மொழிகளில் பள்ளிகள் செயல்படக்கூடிய மாவட்டமாக இம்மாவட்டம் உள்ளது.

13. மல்லிகைப்பூ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் திம்மாபுரம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி செய்து உலகத்தில் உள்ள  பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

14. குட்டி சிவகாசி என்று அழைக்கப்படுகின்ற காவேரிப்பட்டினம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

15. பால் பொருள் உற்பத்தியில் பால் மற்றும் பால் கோவா ஆகியவை இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கிருஷ்ணகிரி ஆவின் நெய் ஆண்டு முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.

16. லிட்டில் இங்கிலாந்து என்று சொல்லப்படுகின்ற தளி இம்மாவட்டத்தில் தான் உள்ளது.

17. கேட்டில் பார்ம் என்று சொல்லப்படுகின்ற கால்நடை பண்ணை ஓசூர் மத்திகிரி பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

18. கர்நாடகாவில் நந்தி மலையில் உற்பத்தியாகின்ற தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி வழியாக பாய்ந்து 6 மாவட்டங்களை வளமாக்கி பின்பு உபரி நீர் கடலில் கலக்கிறது.

19. 13ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் வீர இராமநாதன் தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் “குந்தானி” என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது

20. தமிழகத்தில் பல மாவட்டங்கள் இருந்தாலும் மலை சூழ்ந்த மாவட்டமாகவும், மலைகள் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது.

21. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் அதிக அளவில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இப் பட்டு போச்சம்பள்ளி பட்டு என அழைக்கப்படுகிறது.

22. வரலாற்று புகழ்பெற்ற அத்திமுகம் கோயில், சந்திர சூடேஸ்வரர் கோயில், பெண்ணேஸ்வரர் கோயில் ஆகியன இம் மாவட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் சிறப்பு

23. ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணி கடைகளைக் கொண்ட பர்கூர் டெக்ஸ்டைல் மார்க்கெட் இம்மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றாக உள்ளது.

24. நடுகற்களை அதிகமாக கொண்ட மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது.சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் “நவகண்டம்” எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது.

25. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த திரு ராஜகோபாலாச்சாரி அவர்கள் பிறந்த தொரப்பள்ளி அக்ரஹாரம் இம்மாவட்டத்தில் தான் உள்ளது என்பதும் பெருமைக்குரிய ஒன்றாக உள்ளது.

26.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிந்து ஓவிய நாகரிகம் மற்றும் பல பாறை ஓவியங்கள் மற்றும் பாறை சித்திரங்கள் இந்த மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை பறை சாற்றுகின்றன.

27.கிருஷ்ணகிரி மாவட்டம் சோழர் காலத்தின்போது,  'நிகரிலி சோழமண்டலம்' என்றும் 'விதுகதழகி நல்லூர்' என்றும் அழைக்கப்பட்டது

28.கிருஷ்ணகிரி மாவட்டம் முற்காலத்தில் “எயில் நாடு” எனவும், ஓசூர் “முரசு நாடு” எனவும், ஊத்தங்கரை “கோவூர் நாடு” எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது

29.பாராமகால்” என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள  சையத் பாஷா மலை கோட்டையாகும். இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும்.

30.தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் கிருஷ்ணகிரியின் ஏற்காடு என்றழைக்கப்படும் பகுதியாகும் இது மாவட்டத்தில் மிக உயர்ந்த மலைப் பிரதேசமாகும்.

31.உலகப் புகழ் பெற்ற வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லறைகளை (Dolmen) புதைபொருள் படிவுகளாக கொண்டிருக்கும் மல்லசந்திரம் என்ற இடம் தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

32.ராயக்கோட்டை என்று அழைக்கப்படும் ராயக்கோட்டாவில் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமான ராயக்கோட்டா கோட்டை அமைந்துள்ளது.பாலக்காட்டு பீடபூமியின் எல்லையை வரையறுக்கும் இடமாக ராயக்கோட்டா மலை உள்ளது. பழமையான கோட்டையாக அறியப்படும் இது, பல்வேறு யுத்தங்களை சந்தித்துவிட்டு, அழிவுகளுடன் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

33.கிருஷ்ணகிரி காந்தி சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கவரும் இடமாக உள்ளது.1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் எண்ணற்ற கலைச் சின்னங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் பாரம்பரியத்துடன் உறவையும், கலை மற்றும் கட்டிடக்கலைகள், கலாச்சாரம் மற்றும் தமிழக வரலாற்றையும் ஒருங்கே கொண்டிருக்கும் அமைவிடமாகும்.

No comments