Breaking News

தமிழ்நாட்டில் 1,753 பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலி - மக்களவையில் மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தகவல் :

8c0d366f212314291f23ccafdd02a7e2c70a3905018f42dd60247802f22ca7f1

தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன என மத்திய இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று (வியாழக்கிழமை) திமுக எம்.பி., டி.ரவிகுமார் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறாக பதிலளித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி.,யான டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன?

இதே ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 1-8 வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கான மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கவும். 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கையும், இவை நிரப்பாததற்கான காரணங்களை வழங்குக' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணாதேவி அளித்த எழுத்துபூர்வ பதிலில், 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் ஒப்பளிக்கப்பட்ட மொத்த ஆசிரியர் பணி இடங்கள் 1,44,968 எனவும் அதில் 1,43,215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, 2021-22 ஆம் ஆண்டில் பணி இடங்கள் 1,45,016, நிரப்பப்பட்டவை 1,39,182, காலியாக இருந்தவை 5,834 என்றிருந்தது. இதற்கும் முன்பான 2021 ஆம் ஆண்டில் 1,47,943 பணி இடங்களும் இதில் நிரப்பப்பட்டவை 1,45,551 மற்றும் காலியாக இருந்தவை 2,362 இருந்துள்ளது. எனினும், பாஜக ஆளும் மாநிலங்களில் தமிழகத்தை விட அதிக எண்ணிக்கையில் 1 முதல் 8 வகுப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. 2022-23 ஆம் ஆண்டில், குஜராத்தில் 19,963, மத்தியப் பிரதேசத்தில் 69,667, உத்தரப் பிரதேசத்தில் 1,26,028 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

முன்பு பாஜக கூட்டணி ஆட்சி செய்த பிஹாரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 1,87,209 ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 949 இடங்கள் காலியாக உள்ளன.

மேகாலயா, நாகாலாந்து மற்றும் ஒடிஸா மாநிலங்களில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக 1 முதல் 8 க்கான ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றுகூடக் காலியாக இல்லை. டெல்லியில் இந்த எண்ணிக்கை கடந்த கல்வியாண்டில் வெறும் 4 என உள்ளது.

இதற்கானக் காரணங்களாக மத்திய இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தனது பதிலில் குறிப்பிடுகையில், 'கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், பள்ளிகள் அதன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நிர்வாகத்தில் உள்ளன.

இவர்களின் அதிகாரத்தில், காலியாகும் இடங்களை நிரப்புவதும் இடம் பெற்றுள்ளன. எனினும், காலியாகும் பணியிடங்களை நிரப்புவது என்பது ஒரு தொடர்ச்சியான முறையாக உள்ளது. இவை, ஓய்வுபெற்றவர்கள், பல்வேறு காரணங்களுக்காகப் பணியை ராஜினாமா செய்தவர்கள் மற்றும் பணியிடங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை பொறுத்து நிரப்பப்படுகின்றன.

அந்த அரசுகள், இப்பணியை அவ்வப்போது முடிந்தவரை செய்து வருகின்றன. எனினும், மத்திய அரசின் நிர்வாகத்திலுள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளின் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிலையை குறித்து இணை அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை.

No comments