உயிரைப் பறித்த கொசுவிரட்டி... சுருள், லிக்விட், க்ரீம்... எது பாதுகாப்பானது? மருத்துவ விளக்கம்! 2hr17 shares
சென்னையில், தீப்பிடிக்கும் அளவுக்கு கொசுவிரட்டி லிக்விட் இயந்திரம் சூடாகி, விபத்து உண்டான நிலையில், கொசுவிரட்டி காயில்கள், லிக்விட் போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில், சென்னை அருகே மணலி பகுதியில், கொசுவிரட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி சந்தானலட்சுமி என்ற பெண்ணும், அவரின் 3 பேத்திகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொசுவிரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் லிக்விட், காயில் வகை பொருள்களால் உடல்நலனுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது பற்றி, Society for Emergency Medicine India அமைப்பின் துணைத்தலைவர் மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தரிடம் கேட்டோம்...
``கொசுவிரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் லிக்விட் வகை கொசுவிரட்டிகளால் நிறைய பிரச்னைகள் உள்ளன. முதலாவது, அவற்றை குழந்தைகள் தவறுதலாக உட்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படிக் குடித்துவிட்டால், அது பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு இணையான தாக்கத்தை, குழந்தைகளின் உடலில் உண்டாக்கும். இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அவற்றுக்கான சிகிச்சை முறையும் சிரமமாக இருக்கும்.
ஏற்கெனவே ஆஸ்துமா, வெவ்வேறு வகையான நுரையீரல் பிரச்னைகளால் பாதிப்படைந்தவர்கள் இருக்கும் இடத்தில் லிக்விட் கொசுவிரட்டிகள் பயன்படுத்தும்போது, அவை அலர்ஜியை உருவாக்கலாம். அலர்ஜி ஏற்பட்டதன் அறிகுறியாக தும்மல், இருமல், சளி போன்றவை இருக்கும். கொசுவிரட்டி லிக்விட் புகைதான் இதற்கு காரணமாக இருக்கும். சில சமயங்களில் கொசுவிரட்டி புகை, நுரையீரலுக்குள் செல்லும் போது அது 'நிமோனியா' பாதிப்பை உண்டாக்கலாம்.
சுருள் வடிவில் உள்ள கொசுவிரட்டிகளாலும் இதே மாதிரியான பாதிப்புகள் உண்டாகலாம். அவை இன்னும் அதிகமான புகையை உருவாக்கும். அந்தப் புகையானது அலர்ஜி, நிமோனியா போன்ற பிரச்னைகளை உருவாக்கலாம். இது எல்லோருக்கும் ஏற்படும் என்பதில்லை, ஏற்கெனவே நுரையீரல் பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். கொசுவிரட்டிகளில் இருந்து வெளிப்படும் புகையால் சிலருக்கு கண் எரிச்சலும் ஏற்படலாம். அதிகமாக புகை வருவதன் காரணமாகவே சுருள் கொசுவிரட்டிகளை தற்போது யாரும் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை.
இதுதவிர, க்ரீம் வகையில் கொசுவிரட்டிகள் உள்ளன. க்ரீமை நாம் உடலில் பூசிக்கொள்ளும் போது, அது நம் உடலை வழவழப்பாக மாற்றுகிறது. இதனால், கொசு நம்மீது அமர்ந்து ரத்தம் உறிஞ்சுவதைத் தடுக்கும். மேலும் மற்றொரு லேயர் போல, க்ரீம் நம் சருமத்தின் மீது வேலை செய்கிறது. சருமத்துக்கு ஏற்ற வகையில் தரமான கொசுவிரட்டி க்ரீமை பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் வராது, கொசுவும் நம்மைக் கடிக்காமல் பாதுகாக்கலாம்.
கொசுகொசு கடித்தாலும் ரத்தச்சோகை வரலாம்கொசுவை, ஒருவகை சத்தத்தை வைத்துப் பிடிக்கும் மெஷின்கள் தற்போது உள்ளன. அத்துடன், நீல நிறத்தில் விளக்குபோல் இருக்கும் கொசுவிரட்டி இயந்திரங்களும் உள்ளன. ஆனால் அவை கொசுக்களை எந்தளவுக்குக் கொல்லும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இவற்றில் போலிகளும் உள்ளன என்பதால் கவனமாகத் தேர்வுசெய்து கவனமாகப் பயன்படுத்த வேண்டும்" என்கிறார் மருத்துவர் சாய் சுரேந்தர்.
No comments