கிரெடிட் கார்டு இருக்கா.. அடுத்த முறை "ஸ்வைப்" பண்ணும் முன்பு இதை படிங்க.. இல்லனா பெரிய சிக்கல்தான்:
இப்போது பெரும்பாலான மக்களிடம் கிரெடிட் கார்டு என்பது அத்தியவசயமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அதை எப்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
அதில் செய்யவே கூடாது 5 தவறுகள் குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
இந்த காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் மாத ஊதியம் பெறுவோராகவே இருக்கிறோம். இதனால் பெரும்பாலானோருக்கு அவசியமான ஒன்றைச் சரியான நேரத்தில் வாங்க முடியாமல் போய்விடுகிறது.
இதனால் இந்த காலத்தில் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் பயன்படுத்தும் விஷயமாக கிரேடிட் கார்ட் இருக்கிறது. இருப்பினும், கிரெடிட் கார்டு என்பது இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கும் கத்தியைப் போன்றது.
கிரெடிட் கார்டு: இதை வைத்து நாம் எதாவது சின்ன தவறை செய்தாலும் கூட அது மோசமான பிரச்சினையையே கொடுக்கும். அதேநேரம் கிரெடிட் கார்டை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தினால் அதை வைத்து வேற லெவலில் முன்னேறவும் முடியும். ஏனென்றால் வீடு வாங்குவது, இடம் வாங்குவது உள்ளிட்ட விஷயங்களுக்கு பொதுவாக நமக்குக் கடன் தேவைப்படும். இப்போதெல்லாம் கடன் வாங்க வங்கிக்குச் சென்றாலே நம்மை பார்க்கிறார்களோ.. இல்லையோ.. முதலில் நமது சிபில் ஸ்கோரை தான் பார்க்கிறார்கள்.
சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் இப்போது எளிதாகவும் குறைந்த வட்டியிலும் லோன் கிடைக்கும் என்ற சூழலே இருக்கிறது. கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தினால் ரொம்ப ஈஸியாக அது அதிகரிக்கும். பொதுவாக 900க்கு 750க்கு மேல் ஒருவர் சிபில் ஸ்கோரை வைத்திருந்தால் அவரது சிபில் நன்கு இருக்கிறது என்றே அர்த்தம். சிபில் ஸ்கோரை நல்ல நிலைக்குக் கொண்டு வருவது எல்லாம் ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் இல்லை. சில தவறுகளைத் தவிர்த்தால் போதும்..!
முதல் தவறு: கிரெடிட் கார்டில் நாம் பயன்படுத்தும் தொகையை 45 நாட்களில் முழுமையாகத் திரும்பிச் செலுத்த வேண்டும். அதேநேரம் இதில் மற்றொரு ஆப்ஷனும் இருக்கும் அதாவது குறிப்பிட்ட தொகை மட்டும் செலுத்திவிட்டு மீத தொகையைப் பின்னர் செலுத்தலாம் என்ற ஆப்ஷன் இருக்கும். ஆனால், தப்பித் தவறிக் கூட இந்த தவறை செய்துவிடாதீர்கள். குறித்த நேரத்தில் முழு தொகையையும் கட்டி முடிப்பதைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏனென்றால் முழு தொகையைச் செலுத்தாமல் குறைந்த தொகையை மட்டும் செலுத்தினால்.. அதற்கு மிகப் பெரிய வட்டியைச் செலுத்த வேண்டி இருக்கும்.. இது கிட்டதட்ட வெளியே வாங்கும் வட்டிக்கு இணையாக இருக்கும். எனவே, இந்த தவறை என்ன ஆனாலும் செய்துவிடாதீர்கள். மேலும், சிபில் ஸ்கோரில் சுமார் 35% இதை வைத்துத் தான் தீர்மானிப்பார்கள் என்பதால் இந்த தவறை மட்டும் கண்டிப்பாகச் செய்துவிடாதீர்கள்.
இரண்டாம் தவறு: சிபில் ஸ்கோரை அதிகரிக்க கிரெடிட் கார்ட் ஒரு மிகச் சிறந்த வழி என்றாலும் அதை நாம் பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும். நமக்கு அனுமதிக்கப்பட்ட முழு தொகையையும் நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. அதாவது நமது கிரெடிட் கார்டில் ஒரு லட்ச ரூபாய் வரை பயன்படுத்தலாம் என்று அனுமதி இருந்தால், அந்த முழு தொகையையும் எப்போதும் பயன்படுத்தக் கூடாது. credit utilization ratio எனப்படும் இதுவும் சிபில் ஸ்கோரை பாதிக்கும்.
எப்போதும் அனுமதிக்கப்பட்ட தொகையில் 30%க்கு குறைவாக மட்டுமே பயன்படுத்துங்கள். அதாவது ஒரு லட்சம் அனுமதி இருக்கிறது என்றால் அதை வைத்து ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே பயன்படுத்துங்கள். அப்போது தான் credit utilization ratio குறைவாக இருக்கும். உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு இருந்தால் அதைப் பரவலாகப் பயன்படுத்துங்கள்.
3ஆம் தவறு: அடுத்து உடனுக்கு உடன் பல கிரெடிட் கார்டுகளை அப்ளை செய்யாதீர்கள். பொதுவாக சிபில் ஸ்கோரை செக் செய்வதே இரண்டு வகையாக சொல்வார்கள்.. இது பொதுவாக Soft enquiry மற்றும் hard enquiry என்று இரு வகைப்படும். நாம் சிபில் ஸ்கோரை செக் செய்வது Soft enquiry எனப்படும். இதனால் சிபில் ஸ்கோர் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
அதேநேரம் கிரெடிட் கார்டு அல்லது லோனுக்கு நாம் அப்ளை செய்து அவர்கள் சிபில் ஸ்கோரை செக் செய்வது hard enquiry எனப்படும். அடிக்கடி இந்த hard enquiry நடந்தால் நாம் கடனை வாங்க அவசரம் காட்டுவதாகப் பொருள். எனவே, ஒரு கிரெடிட் கார்ட் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் அப்ளை செய்யக் குறைந்தது 6 மாதங்களாவது காத்திருங்கள்.
4ஆம் தவறு: அதேபோல இன்னும் சில புது ஆப்பர்கள் கிடைப்பதால் புதிய கிரெடிட் கார்டுகளை வாங்கிவிட்டு பழைய கார்டுகளை க்ளோஸ் செய்துவிடுவார்கள். ஆனால், இந்த தவறையும் நாம் செய்யக் கூடாது. ஏனென்றால் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்கிறோம் என்றால் நம் அந்த கார்டை மட்டும் க்ளோஸ் செய்யவில்லை முழுமையாக அந்த ஹிஸ்டிரியை க்ளோஸ் செய்கிறோம் என்று பொருள்.
இது நமது credit utilization ratioவை பாதிக்கும்.. மேலும், நமது சிபில் ஸ்கோரில் நமது கிரெடிட் கார்டு ஹிஸ்டரியும் சுமார் 15% வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, பழைய கிரெடிட் கார்டுகளை எப்போதும் க்ளோஸ் செய்யக் கூடாது.
5ஆம் தவறு: கிரெடிட் கார்டில் இருந்து நம்மால் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியும் என்ற போதிலும், வேறு வழியே இல்லை என்றால் மட்டும் இதில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்யுங்கள்.. வேறு வழியே இல்லை என்றால் மட்டும் பணத்தை எடுங்கள். ஏனென்றால் இதற்கும் அதிக வட்டியைத் தர வேண்டி இருக்கும். மேலும், சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளில் பணத்தை எடுத்த மறுநாளில் இருந்த இந்த அதிக வட்டி தொடங்கிவிடும். எனவே இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த தவறுகளைத் தவிர்த்து கிரெடிட் கார்டுகளை முறையாகப் பயன்படுத்தினால் அது நமக்கு வரப்பிரசாதமாகவே இருக்கும். எனவே, கவனமாக இதைப் பயன்படுத்துங்கள்.
No comments