Breaking News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாவட்ட கல்வி அலுவலருக்கு இரண்டு வார சிறை தண்டனை விதிப்பு

1500x900_1423988-987545
 

கடந்த 2018-ம் ஆண்டில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாமல் இருந்த கல்வித்துறை அதிகாரிக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஒப்புதல் கோரி கடிதம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த சருகணியில் நடுநிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் பணியாற்றிய தையற்கலை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த இடத்துக்கு புதிய ஆசிரியை நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி பள்ளியின் தாளாளர், சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தனர். இதனால் கடந்த 2015-ம் ஆண்டில் பள்ளித்தாளாளர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோர்ட்டு உத்தரவு

அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சருகணி நடுநிலைப் பள்ளியில் தையல் ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

2 வாரம் சிறை தண்டனை

அப்போது கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜரானார். (அவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

அப்போது, 2018-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அதை இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்காக சாமி சத்தியமூர்த்திக்கு 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு வக்கீல், இந்த தண்டனையை தற்போதைக்கு நிறுத்தி வைக்க கோரியதால், முன்னாள் கல்வி அதிகாரிக்கு விதித்த தண்டனையை 2 வாரத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

https://youtu.be/vf2VjQGRQUA

No comments