Breaking News

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்டம்: முதல்வர் ட்வீட்

UPSE_exam_secrateriate_edi.jpg?w=400&dpr=3

யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான 'நான் முதல்வன்' ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசால்  'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகி வரும் 1,000 மாணவர்களை தேர்வு மூலம் தேர்வு செய்து பயிற்சி வகுப்புடன் மாதம் ரூ. 7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 17 வரை இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 10 ஆம் தேதி இதற்கான மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற உள்ளது.

'தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.

No comments