Breaking News

பாட புத்தக தயாரிப்பு குழுவில் சுதா மூர்த்தி, ஷங்கர் மகாதேவன் :

Tamil_News_large_3402521

என்.சி.இ.ஆர்.டி.,யின் புதிய பாடத்திட்ட புத்தகங்களை தயாரிக்க, கல்வியாளர் சுதா மூர்த்தி, பின்னணி பாடகர் ஷங்கர் மஹாதேவன் உள்ளிட்டோர் அடங்கிய, 19 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்விக்கான பாடப் புத்தகங்களை, மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

இந்த பாடப் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் உட்பட பல்வேறு கல்வி வாரியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், மூன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான புதிய பாடத்திட்டத்திற்கான பாடப்புத்தகங்களை தயாரிக்க, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் தலைவர் எம்.சி.பண்ட் தலைமையில் இயங்கும் இந்தக் குழுவில், 19 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரான மஞ்சுல் பார்கவ் இந்த குழுவின் இணைத் தலைவராக உள்ளார்.

கல்வியாளர் சுதா மூர்த்தி, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன், பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால், கணிதவியலாளர் சுஜாதா ராம்துரை உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அடங்குவர்.

இந்த குழு குறித்து என்.சி.இ.ஆர்.டி.,யின் மூத்த அதிகாரி கூறுகையில், 'ஒவ்வொரு பாடத்திட்ட பகுதிக்கும் கற்பித்தல், -கற்றலுக்கான பாடங்களை உருவாக்குவதில் இந்த குழு உதவும்.

'தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புடன் இணைந்து புதிய குழு செயல்படும்' என்றார்.

No comments