உங்களுக்கு குழந்தைகள் இருக்கா! அப்போ கண்டிப்பாக ஆனந்த் சீனிவாசன் சொல்ற இதை கேளுங்க! ரொம்ப முக்கியம்:
இப்போது பலருக்கும் சம்பளம் அதிகமாக இருந்தாலும் கூட அதைச் சேர்க்கும் பழக்கம் யாருக்கும் இல்லாத நிலையில், இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சேமிப்பு எப்போதும் முக்கியமான என்பதைத் தொடர்ந்து பேசி வருபவர் ஆனந்த் சீனிவாசன். இதனிடையே அவர் சேமிப்பு எப்படி தலைமுறையைக் கடந்தும் காக்கும் என்பதை வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பள்ளிப் படிப்புகள் இப்போது காஸ்ட்லி ஆகிவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். இதெல்லாம் விரலுக்கு ஏற்ற வீக்கம் தான்.. நான் இப்படி இருக்க எனது பள்ளிப் படிப்பு தான் முக்கிய காரணம். இந்தளவுக்கு நான் ஒழுக்கமாக இருக்கப் பள்ளியில் எனக்குச் சொல்லித் தரப்பட்ட விஷயங்கள் தான் முக்கிய காரணம். இதனால் தான் பள்ளிப் படிப்பு எப்போதும் முக்கியம் எனச் சொல்கிறேன்.
பள்ளிப் படிப்பு: இப்போது சர்வதேச பள்ளிகள் எல்லாம் வந்துவிட்டன. இருப்பினும், அதில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை செலவாகிறது. இப்போது பல பள்ளிகளிலும் பள்ளியின் தரம் குறைந்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்றால் ஆசிரியர்களுக்கு உரிய சம்பளத்தை தருவதில்லை. ஒரு ஆசிரியருக்குக் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் தரமான முறையில் அவர் கல்வி இருக்கும். மேலும், ஒரு ஆசிரியரின் கீழ் 20 மாணவர்கள் தான் இருக்க வேண்டும். இங்கே பெரும்பாலான பள்ளிகளில் இந்த நிலை இல்லை.
இப்படியொரு சூழலில் மாணவர்களைப் படிக்க வைக்க நாட்டில் இருக்கும் 5% பணக்காரர்களால் மட்டுமே முடியும். மறுபுறம் இங்கே அரசுப் பள்ளிகளும் இருக்கிறது. இருப்பினும், அதில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. சொந்த காசு போட்டுச் சொல்லித் தரும் சில ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் உள்ளனர். அதேநேரம் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருப்போரும் உள்ளனர். எனவே, இதை நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
சந்திரயான் வெற்றி ஓகே! சத்தமே இல்லாமல் இந்த இந்திய நிறுவனங்கள் என்ன செய்து பாருங்க- ஆனந்த் சீனிவாசன்
செலவாகும்: எனவே, நன்கு ஆங்கிலம் சொல்லித் தரும் ஒரு சென்ட்ரல் போர்ட் ஸ்கூல் தேவை. இதற்கு மாதத்திற்கு 20 முதல் 30 ஆயிரம் வரை ஆகும். இதில் வேறு வழி இல்லை. நல்ல ஆசிரியர் வேண்டும் என்றால் இந்த செலவைச் செய்தே ஆக வேண்டும்.
எங்கள் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்ல மாட்டார்கள். அப்போது அவர்கள் தான் எங்களுக்குச் சொல்லித் தந்தார்கள். தினசரி 2 மணி நேரம் வந்து சொல்லித் தருவார்கள். அதேநேரம் இந்த காலத்தில் பல பெண்கள் பல வேலைக்குச் செல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் டீச்சிங் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே நல்ல டீச்சர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுதான் பெரிய பிரச்சினை.
எப்படிச் செய்யலாம்: எனவே, இப்போது உயர் வகுப்பில் மாதம் 60 ஆயிரமும் குறைந்தது 25 ஆயிரம் இல்லாமல் தரமான கல்விக்கு வாய்ப்பு இல்லை. குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டியது அவசியம். எனவே, நாம் இதைத் தான் செய்ய வேண்டும். இதற்கு நாம் முன்பு இருந்தே பணத்தைச் சேர்க்க வேண்டும். சிறுக சிறுக முதலீடு செய்யலாம்.
எல்லாவற்றையும் விட நீங்கள் உங்கள் பேரனுக்காகச் சேர்க்க வேண்டியது முக்கியம். ஏனென்றால், உங்கள் பையன் சரியான நேரத்தில் இரண்டு குழந்தையைப் பெற்றுக் கொண்டால் 30, 32 வயதில் குழந்தை கல்விக்குப் பணம் தேவைப்படும். அப்போது உங்கள் பையனும் கேரியரில் தொடக்க நிலையில் இருப்பார். எனவே, அவரால் இரண்டு குழந்தைகளை முழுமையாகப் படிக்க வைக்க முடியாது. எனவே தான் நாம் பேரன்களுக்காகச் சேர்த்து வைக்க வேண்டும்.
பேரக்குழந்தைகள்: செல்வம் சேர்ப்பது என்பது ஒருவருடன் முடியாது. அது ரிலே போட்டி போல ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறைக்குச் செல்லக் கூடியது. நமது அப்பா, அம்மா நம்மை வைத்து இருந்ததை விட நமது குழந்தைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கே பெரும்பாலானோர் அதைச் செய்ய மறுக்கிறார்கள். தான் சம்பாதித்துத் தானே செலவு செய்ய வேண்டும் என்கிறார்கள்.
நாம் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பேரக்குழந்தைகளுக்கும் செல்வத்தை விட்டுச் செல்ல வேண்டும். ஒழுக்கமாக இருந்து, வரவுக்குக் குறைவாகச் செலவு செய்தாலே போதும் நாம் எங்கோ சென்றுவிடலாம். எனவே, செல்வம் சேர்ப்பது என்பது உங்களுக்கானது மட்டுமில்லை. நீங்கள் உங்கள் குழந்தை மற்றும் பேரக்குழந்தைக்குச் சேர்த்தே பார்க்க வேண்டும்" என்றார்.
No comments