Breaking News

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இன்று முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - திருக்குவளையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார் :

IMG_20230825_070847_078
 

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை, திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அறிவித்தார். முதலில் இத்திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளிகள், தொலைதூரகிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்படும். பின்னர், படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.

அந்த வகையில் முதல் கட்டமாக, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில், மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த மார்ச் 1-ம் தேதி இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 பேர், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 பேர், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 பேர், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 பேர் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுவருகின்றனர்.

இந்த திட்டத்துக்கு தற்போது ரூ.33.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

16 லட்சம் மாணவர்கள் பயன்: இந்நிலையில், ‘‘மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் இன்று காலை தொடங்கி வைத்து, பள்ளிக் குழந்தைகளுடன் உணவு அருந்துகிறார்.

கட்சி பேதமின்றி, அனைத்துஎம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து காரில் மயிலாடுதுறை வந்தார். அங்குபல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றமுதல்வர், நேற்று இரவு வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் தங்கினார்.

காலை உணவு விரிவாக்க திட்டத்தை இன்று தொடங்கி வைத்தபிறகு, ஓய்வு எடுக்கும் முதல்வர், மாலை 4 மணி அளவில் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நாளை (ஆக.26) காலை 9 மணி அளவில் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

நாளை மாலை திருவாரூர் வரும்முதல்வர், சன்னதி தெருவில் உள்ளதங்கள் பூர்வீக இல்லத்தில் தங்குகிறார். ஆக.27-ம் தேதி காலை திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. நாகைசெல்வராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர், காரில் திருச்சி சென்று, விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்

No comments