Breaking News

வங்கியில் கடன் வாங்கி உள்ளீர்களா.. குறிப்பாக வீட்டு கடன் வாங்கினீர்களா.. ரிசர்வ் வங்கி குட்நியூஸ்

 

அடிக்கடி வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய வாய்ப்புகள் குறித்து வங்கிகள் மற்றும் வங்கிசாராத நிதிநிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

சொந்த வீடு அனைவரது கனவாக உள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் போட்டி போட்டு கடன் தருகின்றன. அதிக வருமானம் உள்ளவர்கள், நிலையான வருமானம் உள்ளவர்கள், அதாவது ஐடி ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தான் வீட்டுக்கடன்களை வாங்குகிறார்கள். இவர்களில் பலர் கடனுக்கான விதிமுறைகள் தெரியாமலேயே கண்ணை மூடிக்கொண்டு வீட்டுக்கடன்களை வாங்கி பின்னர் அவதிப்படுகிறார்கள்.

பொதுவாக கடன்களின் வட்டி விகிதம் நிலையாக இருந்தால் வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இது பொதுவாக தனிநபர் கடனில் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், எப்போதுமே வட்டி விகிதம் மாறாது. ஆனால் மாறும் வட்டி விகிதத்தில் தான் வீட்டுக்கடன் பொதுவாக தரப்படுகிறது. வட்டி விகிதம் குறையும், வீடு, வாகனங்கள் வாங்க வட்டி விகிதம் குறையும். ஆனால் வட்டி உயரும் போது, வீட்டுக்கடன் வட்டி விகிதம் உயரும்.

பொதுவாக கடந்த சில ஆண்டுகளில் வட்டி விகிதம் குறைந்து கொண்டேதான் வந்தது. ஆனால் பணவீக்கம் காரணமாக, கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி ஐந்து முறை உயர்த்திவிட்டது.ஒட்டுமொத்தமாக இதுவரை 25 சதவீதம் உயர்த்திவிட்டது. இதனால் வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கியவர்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தான் அடிக்கடி வட்டி அதிகரித்து வருவதால் கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு தர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஏனெனில் பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் மாத தவணையை உயர்த்தியும், கடன் கால அளவை நீட்டித்தும் வருவதால், அதை பற்றி சரியான புரிதல் இல்லாமல் கடன் தொகை மீது அபராத வட்டி கட்டும் அளவிற்கு நிலைமை உள்ளது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பினை வங்கிகளுக்கு வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இஎம்ஐ எனப்படும் மாத தவணை அடிப்படையில், மாறுபடும் வட்டி விகிதத்தை கொண்ட கடன்களுக்கு வட்டி விகிதம் அவ்வப்போது மாறும். இந்நிலையில் தனிநபர் கடன்களை பொறுத்தவரை, வட்டி உயர்த்தப்படும் போதெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமலும், சம்மதம் பெறாமலும், இ.எம்.ஐ. தொகை உயர்த்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

இதேபோல் வாடிக்கையாளர்களின் சம்மதம் இல்லாமல் கடன் காலஅளவு நீட்டிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே வட்டி விகிதம் மாறும் விவகாரத்தில் வங்கிகள் உரிய கொள்கை நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு ஒப்புதல் வழங்கும்போதே, வட்டி உயர்ந்தால் இ.எம்.ஐ. தொகை உயரும் அல்லது கடன் கால அளவு நீட்டிக்கப்படும் என்பதை கண்டிப்பாக வங்கிகள் கடன் வாங்குபவர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

அதுபோன்று கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்போது, இஎம்ஐ தொகையை உயர்த்தினாலோ அல்லது கடன் கால அளவை நீட்டித்தாலோ அதையும் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வட்டி உயரும்போது, நிலையான வட்டி விகிதத்துக்கு (பிக்சட் ரேட்) மாறும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்க வேண்டும். கடன் காலத்தில் எத்தனை தடவை மாறிக்கொள்ளலாம் என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் போது, இ.எம்.ஐ. தொகையை உயர்த்துதல் அல்லது கடன் கால அளவை நீட்டித்தல் ஆகியவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை வாடிக்கையாளர்களின் முடிவுக்கே விட வேண்டும். மேலும் கடனை முன்கூட்டியே பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ செலுத்தும் வாய்ப்பையும் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு காலாண்டின் இறுதியில், இ.எம்.ஐ. தொகையில் அசலுக்கு எவ்வளவு, வட்டிக்கு எவ்வளவு பிடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாதங்கள் பாக்கி உள்ளன என்பது பற்றி எழுத்துப்பூர்வமாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதாக டிசம்பர் 31-ந் தேதிக்குள் வங்கிகள் உறுதி அளிக்க வேண்டும்" இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி 'நியாயமான கடன் நடைமுறை-கடன் கணக்குகள் மீது அபராத கட்டணம்' என்ற தலைப்பில் திருத்தப்பட்ட விதிமுறைகள் அடங்கிய மற்றொரு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு வங்கிகள் மற்றும் வங்கிசாராத நிதிநிறுவனங்களுக்கான அறிவுரைகள் ஆகும். இதன்படி, வாடிக்கையாளர்கள் மனதில் கடனை திருப்பி செலுத்தும் எண்ணம் உருவாக வேண்டும், என்பதற்காகத்தான் அபராத கட்டணம் மற்றும் அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதை வருவாயை பெருக்கும் வழிமுறை போல் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் கடைபிடிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கடன் வட்டிக்கு மேல், கூடுதலாக அபராத வட்டி வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அபராத வட்டி வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது. இத்தடை, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

கடன் ஒப்பந்த விதிமுறைகளை வாடிக்கையாளர் மீறும்போது, அபராதம் விதிக்க வேண்டி இருந்தால், அதை அபராத கட்டணமாகவே வசூலிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேநேரம் வசூலிக்கப்படும் அபராத கட்டணமும், கடன் நிபந்தனைகளை மீறியதற்கு பொருத்தமான வகையில், நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும், அந்த கட்டணத்துக்கு வட்டி கணக்கிடக்கூடாது என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட வட்டிக்கு மேல் கூடுதலாக அபராத வட்டி வசூலிக்கக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. எனினும் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுகள் கடன் அட்டை, வர்த்தக கடன்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments