Breaking News

திருவிழாக்களில் சிலர் திடீரென 'சாமியாடுவது' ஏன்? அவர்கள் உடலில் என்ன மாற்றம் நடக்கிறது?

 


சென்னையில் மகா சிவராத்திரி நிகழ்வில் காளி வேடமணிந்து சாமியாடும் பெண் (கோப்புப்படம்)

மதுரை புத்தக கண்காட்சியில் என்ன நடந்தது?

மதுரையில் பபாசி (தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்) ஒருங்கிணைத்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு, புத்தக கண்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் ஆன்மிக பாடல்களை பாடினர்.

அப்போது, "அங்கே இடி முழங்குது" எனும் கருப்பசாமி பாடல் பாடப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு திரண்டிருந்த பள்ளி மாணவிகள் முன்பாக, கருப்பசாமி வேடமணிந்த ஒருவர் வந்து பாடலுக்கு ஏற்ப ஆவேசமான முகபாவனைகளுடன் ஆடினார். அப்போது, அங்கிருந்த பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக 'சாமியாடினர்'.

புத்தகக் கண்காட்சியில் ஆன்மிக பாடல்கள் பாடப்பட்டதற்கு கண்டன குரல்களும் எழுந்தன. இதற்கிடையில், கூட்டாக பள்ளி மாணவர்கள் 'சாமியாடியது' பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், அது 'சாமியாடுவதுதானா' அல்லது அப்படி ஏற்படுவதற்கான உளவியல் காரணங்கள் என்ன என்பதை அறியும் முயற்சி இது.

'சாமியாடுவது' ஏன்?

பண்பாட்டு ரீதியாக பார்த்தால், ஆழ்மன பற்றுகளே இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைவதாக சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூகவியல் ஆய்வாளரான தொ. பரமசிவன் தன்னுடைய 'பண்பாட்டு அசைவுகள்' எனும் புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.

"இறைத் தொடர்பான சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்படும் போது உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனிதனிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உளரீதியான மாற்றமே மற்றவற்றிற்கு காரணமாக அமைவதாகவும் கருதலாம்.

'வினைகளுக்கு மூல காரணமாக இருப்பவை மனதில் தோன்றும் பற்றுகள் என்றும், இவை உள்ளத்தில் தோன்றி ஆழமாக இடம் பிடிக்கின்ற நிலையில் அப்பற்றுதலே தம்மை ஆட்படுத்தும் எனறு குறிப்பிடுவர். அவ்வடிப்படையில் இறைத் தொடர்பான சிந்தனைகள் மனிதனை ஆட்படுத்தும் வேளையில் சாமியாடுதல் நிகழ்வு நாட்டுப்புறங்களில் நடைபெறுகின்றது. இவ்வாறான வழிபாட்டு முறை தமிழ்ச் சமூகத்தில் மரபு வழியாக இருந்து வருபவையாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

Getty Imagesஆழ்மன பற்றுகளே இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்

"இப்படி கடவுளின் பெயரால் தன்நிலை மறந்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில், 'சாமியாடும்' நிகழ்வு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாக இல்லாமல், பெரும்பாலான கலாசாரங்களில், மத வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது" என்கிறார், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த உளவியல் மருத்துவர் கிருபாகரன்.

இப்படி தன்நிலை அறியாமல் இயல்புக்கு மாறாக ஆவேசமாக நடந்துகொள்வதற்கு பல உளவியல் காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

"இதுவொரு வகையான பன்முகப் பிளவுபட்ட ஆளுமைக் கோளாறு (Dissociative identity disorder). சாமியாடுவதை கலாசார ரீதியாக ஏற்றுக்கொண்டதால், இதனை ஒரு உளவியல் குறைபாடாக நாம் பார்ப்பதில்லை" என்கிறார் கிருபாகரன்.

இந்த நிலை ஏற்படுபவர்கள் தங்களின் சுயநினைவில் இருக்க மாட்டார்கள். "வேறு ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டது (possession attack) போன்று நடந்துகொள்வார்கள். இதனுடன் வேறு சில மனநல குறைபாடுகளும் அவர்களுக்கு இருக்கலாம்" என கூறுகிறார் அவர்.

சிறுவயது பாதிப்புகள் காரணமா?

சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள், இழப்புகள், நெருக்கமானவர்களின் இறப்புகள், பள்ளிகளில் மற்றவர்களின் கேலிக்கு ஆளாதல், பெற்றோர்களின் கவனிப்பின்மை, பெற்றோர்கள் துணையின்றி வளர்தல் போன்ற சூழ்நிலைகள் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம் என அவர் விளக்குகிறார். சிறுவயதில் போர், கடத்தலை எதிர்கொண்டவர்கள், இதேபோன்ற கலாசார சூழலில் வளர்க்கப்படுவதும் கூட காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்.

"பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மரபியல் ரீதியாகவும் இது தொடர்கிறது. சாமியாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் "என் அம்மா, பாட்டி கூட சாமியாடினார்கள்' என கூறுவது உண்டு" என்கிறார் கிருபாகரன்.

சமூக கலாசார மதநெறிகளுக்கு அப்பாற்பட்ட மெய்மயக்க (தன்னிலை மறந்த மயக்க) நிலை என்றும் (Dissociative trance disorder) இதனை உளவியல் ரீதியாக குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு புறச்சூழலை மறந்து, தன்நிலை இழந்து செயல்படுவதை உளவியல் ரீதியாக இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

Getty Imagesகோப்புப் படம்

கோவில் திருவிழாக்களில் வாசிக்கப்படும் வாத்தியங்களில் குறிப்பிட்ட அதிர்வெண்ணிலிருந்து இசை வெளிப்படும் போது அதை கூர்ந்து கவனமாக கேட்க தொடங்கும்போது, அத்தகைய நிலை சிலருக்கு ஏற்படுவதாக, மருத்துவர் கிருபாகரன் கூறுகிறார். "போதை பொருட்களை உட்கொண்டு இந்த நிலைக்கு செல்வதை இதனுடன் ஒப்பிட கூடாது" என்கிறார் அவர்.

மதுரையில் பள்ளி மாணவிகளும் கூட, இப்படி இசையை உன்னிப்பாக கவனித்து, அதனால் ஆட்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவர் கூறுகிறார். "இத்தகையவர்களிடம் பின்னர் ஒரு சமயத்தில் நீங்கள் சாமியாடிய போது என்னென்ன செய்தீர்கள், மற்றவர்கள் பேசியது நினைவிருக்கிறதா என கேட்டால் எதுவும் ஞாபகம் இருக்காது. தங்களின் ஆளுமையை மறந்து, உணர்விழந்து அத்தகைய நிலைக்கு தள்ளப்படுவார்கள். நம் உடலின் கட்டுப்பாடு (motor control) நம்மிடம் அந்த சமயத்தில் இருக்காது. நீங்கள் நீங்களாகவே இருக்க மாட்டீர்கள். உங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள்" என விளக்குகிறார் கிருபாகரன்.

உடலில் என்ன மாற்றம் நடக்கிறது?

அந்த சமயத்தில் உடலில் நரம்பியல் ரீதியாக வேதியியல் மாற்றங்கள் (neuro chemical changes) உடலில் நிகழும் என குறிப்பிடும் அவர், டோப்பமின், செரட்டோனின் உள்ளிட்ட ரசாயனங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்கிறார். "சிறுவயதில் அவர்கள் எதிர்கொண்ட சில விரும்பத்தகாத சூழல்கள், இந்த ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளன."

"பல்வேறு கலாசாரங்களில் சிலர் இறந்தவர்களை போன்றே பேசுவார்கள். அவர்களின் குரலை கூட அப்படியே கொண்டு வருவார்கள். இறந்தவர்களின் குணநலன்களை தங்களுக்கே தெரியாமல் (subconscious) உள்வாங்கியிருப்பார்கள். அது இத்தகைய தருணங்களில் வெளிப்படுகின்றது" என்றார், கிருபாகரன்.

Getty Imagesநரம்பியல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார், உளவியல் மருத்துவர் கிருபாகரன்

கலாசார ரீதியாக 'சாமியாடுதல்' பலருக்கும் உளவியல் ரீதியான பிரச்னையாக தெரிவதில்லை. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றம் தென்பட தொடங்கும்போது, மதம் சார்ந்த முடிவுகளை நாடிவிட்டு, கடைசி தீர்வாக உளவியல் மருத்துவரை அணுகுவதாக அவர் கூறுகிறார்.

"விடுதியில் தனியாக இருக்கும் பெண்ணிடம் சில நபர்கள் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர், அதன் தொடர்ச்சியாக விடுதியில் ஒருவர் இறந்து போகவே, இறந்த நபரின் ஆன்மா தனக்குள் புகுந்துவிட்டது போன்று ஓர் இளம்பெண் நடந்துகொள்கிறார். அவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்" என உதாரணம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அறிகுறிகளுக்கு ஏற்ப இத்தகைய உளவியல் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆன்ட்டிசைகோட்டிக் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

வளர்ப்பு முறையுடன் தொடர்பு

குழந்தை பருவத்தில் எதிர்கொண்ட சிக்கல்கள், வளர்ப்பு முறை இத்தகைய வித்தியாசமான நடத்தைகளுக்கும் தொடர்பிருப்பதாக பல ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

இந்திய உளவியலுக்கான சர்வதேச ஆய்விதழில் (The International Journal of Indian Psychology) கடந்த ஏப்ரல் மாதம் இதுதொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியானது. குழந்தை பருவத்தில் பெற்றோரின் நடத்தை குறித்து அக்குழந்தை புரிந்துகொள்ளும் விதம் (Perceived parenting), மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், சிக்கலான சூழல்கள் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருதல் குறித்து, 18 முதல் 26 வயதுடைய 127 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவை எப்படி உளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வளர்ப்பில் தாக்கம் செலுத்துகிறது என்பதை இந்த ஆய்வு அலசுகிறது. வளர்ப்பு முறைக்கும் ஆன்மிக அறிவு மற்றும் கடினமான சூழல்களிலிருந்து மீண்டு வருதலுக்கும் தொடர்பிருப்பதாக இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

Getty Imagesஅத்தகைய நிகழ்வுகளின் போது ஒருவர் தன்நிலை மறக்கிறார்

அதே இதழில், அதே காலகட்டத்தில் வெளியான மற்றொரு ஆய்வுக்கட்டுரை, குழந்தை பருவத்தில் எதிர்கொண்ட துன்புறுத்தல்களுக்கும் இத்தகைய ஆளுமை கோளாறு (dissociative disorder) குறைபாட்டுக்கும் உள்ள தொடர்பை பேசுகிறது. ஒடிசாவில் இத்தகைய குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 11-19 வயதுடைய 38 நோயாளிகள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்ட பெரும்பாலான நோயாளிகள், சிறுவயதில் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியான புறக்கணிப்பை எதிர்கொண்டதாகவும், அவர்களுடைய பெற்றோர் சர்வாதிகாரமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுடைய சமூக பின்னணி குறித்தும் ஆய்வில் அலசப்பட்டது.

ஆண்களை விட பெண்களே அதிகம் 'சாமியாடுவது' ஏன்?

தமிழ் கலாசாரத்தில் பெண்களே பெரும்பாலும் சாமியாடுகின்றனர். "பெண்களே ஆண்களைவிட சிறுவயதில் பலவித அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதால் இப்படி இருக்கலாம்" என்கிறார், மருத்துவர் கிருபாகரன்.

சமூகவியல் ஆய்வாளரான தொ. பரமசிவன் தன்னுடைய 'பண்பாட்டு அசைவுகள்' எனும் புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார். "உளவியல் ரீதியாகப் பெண்ணின் அழுத்தி வைக்கப்பட்ட எண்ணங்களே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. 'பெண்கள் தலைவிரி கோலத்துடன் ஆடுதல் என்பது அமுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டுத் தங்களின் ஆவேசத்தைக் காட்டுவதே சாமியாடுதலாகும் என்றும், சாமியாடும் போது ஒருமையில் நிஜ வாழ்வில் பயன்படுத்த முடியாத சொற்களைத் தளமாற்றம் பெற்ற நிலையில் பெண்கள் பயன்படுத்துவதென்பது தங்களின் நிஜ வாழ்வின் ஒடுக்குதல்களைத் தற்காலிகமாக உணர்த்தும் மனவியல் செயல்பாடாகும் என உளவியல் ரீதியாக கூறுகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

source: bbc.com/tamil


No comments