Breaking News

செப்.12-ல் பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை:

 


பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் நாளை மறுதினம் (செப்டம்பர் 12) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் சென்னையில் இன்று கூறியதுது: "திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. இது சார்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் தமிழக அரசுக்கு நினைவூட்டும் விதமாக எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழக முழுவதிலும் இருந்து 10 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்.

தங்கள் நிலையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து பேசும்போதெல்லாம் கூறி விளக்கினோம். அவர் முதல்வரிடம் கலந்து பேசி நிறைவேற்றித் தருவோம் என்று கூறினார். ஆனால், இதுவரை அதற்கான எந்த ஒரு முகாந்திரமும் தெரியவில்லை. தாங்கள் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறோம். எனினும், தற்போதைய கோரிக்கைக்காக தனியே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்" என்று முருகதாஸ் கூறினார்.

இந்தப் பேட்டிக்கு முன்பாக சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பனை, இந்த போராட்டக் குழுவினர் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments