Breaking News

தமிழகத்தில் எந்த கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும்? - அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

1318800

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இந்தாண்டு எந்தக் கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பமான சூழல் உள்ளது. இதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மழலையர் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாவட்டத் தலைவர் பொன்.கருணாநிதி, மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.ராஜூ, மாவட்டத் துணைத் தலைவர்கள் கலையரசன், சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் மாரிசெல்வம் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேசன் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ்நாடு மழலையர் பள்ளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.கவுதம் மதுரை மழலையர் பள்ளி பொது நலச் சங்கத் தலைவர் நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மழலையர் பள்ளிகள் முதலில் சமூக நலத்துறையின் கீழ் இருந்தது. அப்போது அங்கீகாரம் பெறுவது எளிதாக இருந்தது. தற்போது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அங்கீகாரம் பெறுவதில் சிரமம் உள்ளது.

இதனால் மழலையர் பள்ளிகளுக்கு எளிதாக அங்கீகாரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கான சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே புத்தகங்கள் விலை, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 18 விதமான வரிகளை செலுத்தி வருகிறோம்.

இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கான சுமை கூடியுள்ளது. இந்த சுமை காரணமாக கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. . அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் 12 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்கிறோம். இக்கல்விக்கான கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு இன்னும் வழங்காமல் உள்ளது. இந்தக் கட்டண பாக்கியை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் மும்மொழி கொள்கையை செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்வி கொள்கையிலும் மும்மொழி கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்விக் கொள்கையை தெரிவித்துள்ளது. அதில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதனால் இந்தாண்டு தேசிய கல்விக் கொள்கை அல்லது தமிழக அரசின் கல்வி கொள்கையில் எந்தக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பமான நிலை உள்ளது. கண்ணைக் காட்டி காட்டிவில் விட்டது போல் நிற்கிறோம். இதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments