Breaking News

"சரியும் தங்கம் விலை.." என்ன காரணம்! இப்போது வாங்கலாமா? நறுக் என 4 வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்

 


தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை விளக்கிய ஆனந்த் சீனிவாசன் வரும் நாட்களில் அது எப்படி இருக்கும் என்பதையும் விளக்கி இருக்கிறார்.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது. நேற்று மட்டும் சற்று ஏற்றம் கண்ட நிலையில், அதன் முன்பு குறைந்தே வந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த நான்கு நாட்களில் ஒரு கிராம் தங்கம் சுமார் 190 ரூபாய் வரை குறைந்துள்ளது.

சரியும் தங்கம்: தங்கம் திடீரென குறைந்துள்ள நிலையில், இப்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது மேலும் குறையுமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை திடீரென குறைய என்ன காரணம் வரும் காலங்களில் அது குறையுமா என்பதை பற்றி பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இப்போது தங்கம் விலை குறையச் சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்கள், குறிப்பாகச் சீனாவே காரணம் என்ற ஆனந்த் சீனிவாசன், தங்கம் வாங்க இதுவே சரியான நேரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தங்கம் விலை அமெரிக்காவில் 2% வரை குறைந்துள்ளது. இந்தியாவிலும் தங்கம் விலை குறையும்.. உடனே ஓடிப் போய் வாங்கிக் கொள்ளுங்கள்.

சீனா தான் காரணம்: சீன மத்திய வங்கி கடந்தாண்டு தங்கத்தை வாங்கவில்லை. இதுவே தங்கம் விலை குறைய முக்கிய காரணமாகும். சீனா தங்கம் வாங்கவில்லை என்றவுடன் தங்கம் விலை 2% சட்டென சரிந்துவிட்டது. தங்கம் விலை இங்கும் அதே அளவுக்குக் குறைந்தால் நாம் தாராளமாக வாங்கலாம். இப்போது தங்கம் விலை கொஞ்சம் ரிலாக்ஸாக மூவ் ஆகும்.

அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் வரை தங்கம் விலை இதே ரேஞ்சில் தான் இருக்கும். நமது நாட்டில் நான் முன்பே சொன்னது போலத் தங்கம் விலை 6,500 முதல் 7,000 வரை மேலே கீழே சென்று கொண்டு இருக்கும். அதிகபட்சம் 6,200 வரை கீழே செல்லலாம். அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தால் தங்கம் விலை சட்டென உயரத் தொடங்கிவிடும்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன தொடர்பு: தங்கம் விலையைப் பொறுத்தவரை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்திற்கும் தங்கத்திற்கும் நேரடியாகவே தொடர்பு இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையும். அங்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை அதிகரிக்கும். கொரோனாவுக்கு பிறகு அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை அதிகரித்து வந்த நிலையில், தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருந்தது.

அமெரிக்க வங்கி: அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்ற தகவல் வெளியான உடனேயே கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை அதிகரித்தது. இதற்கிடையே தற்போதைய அமெரிக்க பொருளாதாரத்தை வைத்துப் பார்க்கும் போது இந்தாண்டு இறுதி வரை வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதைக் குறிப்பிட்டே ஆனந்த் சீனிவாசன், இந்தாண்டு இறுதியில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கினால் தங்கம் விலை அதிகரிக்கும் என்கிறார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

No comments